ஆணின் சடலம் மீட்பு

Monday, May 2nd, 2016

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு பின்புறமாகவுள்ள பற்றைக்காட்டுக்குள் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலமொன்று  மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெரியவருவதாவது – 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம், கடந்த சனிக்கிழமை (30) மாலை மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். விறகு வெட்டச் சென்றவர்கள் பற்றைக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதை கண்டு சென்று பார்த்தபோது, நெஞ்சுப்பகுதி காட்டு விலங்குகளால் உண்ணப்பட்டு உருக்குலைந்த நிலையில் இச்சடலம் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, தடஅறிவியல் பொலிஸாருடன் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் புலன்விசாரணைகளை மேற்கொண்டனர்.

அண்மையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும் மேற்படி சடலம் காணாமல் போயிருந்தவருடையதாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Related posts: