ஆட்டம் காணுமா அரசு – இன்று நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு!

Thursday, July 11th, 2019

அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.

ஜேவிபியினால் இந்த அவநம்பிக்கை பிரேரணை முன்வைக்கப்பட்டு நேற்று வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இந்த அரசாங்கத்துக்கு ஆட்சியில் நீடிக்கும் உரிமை இல்லை என்று குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து முன்னரே அறிந்திருந்தும் அதனை தடுப்பதற்கு அரசாங்கம் தவறி இருக்கிறது.

இந்த விடயத்தில் அரசாங்கம் பொறுப்பற்று செயற்பட்டுள்ளது.

இனியும் இந்த அரசாங்கம் நீடிப்பதை அனுமதிக்ககூடாது.

மக்களுக்கு புதிய நாடாளுமன்றம் ஒன்றை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

இதற்காக ஒன்றிணைந்த எதிரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இந்த பிரேரணைக்கு ஆதரவாக தங்களது வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என்று அனுரகுமார திஸாநாயக்க கூறினார்.

எவ்வாறாயினும், ஏப்ரல் 21 தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கே இருப்பதாக, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல சபையில் சுட்டிக்காட்டினார்.

இந்த அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதத் தொடர்ச்சி இன்றும் நடைபெற்று மாலை 6.30க்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

தற்போது ஐக்கிய தேசிய கட்சி 106 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு ஆசனமும் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்துள்ளது.

இதன்படி ஆளும் தரப்புக்கு மொத்தமாக 107 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் 95 உறுப்பினர்கள் உள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 ஆசனங்களைக் கொண்டிருப்பதுடன், அவற்றில் இரண்டு பேர் கூட்டமைப்பில் இருந்து தனித்து செயற்படுகின்றனர்.

ஜேவிபி ஆறு உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தைக் கொண்டுள்ளது.

இதன்படி எதிர்க்கட்சிக்கு 118 ஆசனங்கள் உள்ளன.

கடந்த ஒக்டோபர் புரட்சியின் பின்னர் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையை நிரூபிக்கும் பிரேரணைக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்திருந்தது.

இதன் மூலமே ஆளும் கட்சி தங்களது பெரும்பான்மையை காண்பித்தது.

இந்தமுறை அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு செயற்படும் என்பது தொடர்பாக இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

எவ்வாறாயினும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ள கூடாது என்று, அதன் பங்காளி கட்சிகளான டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஆகியன வலியுறுத்தியுள்ளன. இருந்த போதும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் அரசாங்கம் வழங்கும் சலுகைகளுக்காக சோரம் போகும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருப்பதாகவே அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related posts: