ஆடை ஏற்றுமதி துறை போன்று அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒளடத ஏற்றுமதி துறையிலும் கவனம் செலுத்தப்படும் – பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Tuesday, August 18th, 2020

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டின் ஒளடத தேவையை பூர்த்தி செய்வதுடன், ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு உற்பத்தியை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுகாதாரத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பசில் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது உள்ளூர் ஒளடத தேவையில் 85 வீதத்தினை இறக்குமதி செய்ய அரசாங்கம் ஏற்கனவே பெரும் செலவுகளைச் செய்து வருவதாக சுட்டிக்காட்டிய பசில் ராஜபக்ஷ உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஏற்றுமதி திறனைக் கொண்ட தொழிற்சாலைகளை தனியார் முதலீட்டாளர்களை கொண்டு நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தை செயற்படுத்துவதற்கு ஒரு மகத்தான ஆணையை வழங்கியுள்ள மக்கள், சுகாதாரத் துறையில் ஒரு தெளிவான மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். இந்த மாற்றத்தை ஏற்படுத்த சுகாதார துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதித் துறை தொடர்பான நிறுவனங்களின் உதவியை நாடுவதாகவும் பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

அத்துடன் ஆடை ஏற்றுமதி துறையில் முன்னணியில் திகழ்ந்த இலங்கை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒளடத ஏற்றுமதி துறையில் முன்னணியில் திகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன எனவும் பசில் ராஜபக்ஷ அவர்கள் மேலும்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: