ஆசிரிய நியமனம், இடமாற்றம் தொடர்பான புதிய கொள்கை – ஜனாதிபதி!

Friday, June 23rd, 2017

ஆசிரிய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பான புதிய கொள்கையை இவ்வாண்டில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். புதிய கொள்கைக்கமைய எந்தவொரு பாடசாலையிலும் ஆசிரியகள் மேலதிகமாக இருக்க முடியாதென்பதுடன், மேலதிகமாக இருக்கும் ஆசிரியர்கள் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற வேண்டுமென சுற்றறிக்கை வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பொலநறுவை, சுங்காவில முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புதிய கட்டிடத்தை மாணவர்களுக்கு உரித்தளிக்கும் நிகழ்வு நேற்று (22) முற்பகல் நடைபெற்றபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டிலுள்ள பிள்ளைகளின் கல்வி சீராக வேண்டும் என்பதற்காக தீர்மானத்துக்கு வந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், நாட்டிலுள்ள எந்தவொரு பிள்ளைக்கும் கல்விக்கான சலுகைகள் கிடைக்காமல் இருக்கக் கூடாதென்று தெரிவித்தார். நாட்டிலுள்ள அனைத்து இனத்தவர்களினதும் பிரச்சினைகளை தீர்த்தல், வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் ஒரே வகையில் சேவையாற்றுதல் ஆகியவை ஜனாதிபதி என்ற வகையில் தனது பொறுப்பாகுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

”புத்தெழுச்சிசெறும் பொலநறுவை” மாவட்ட திட்டத்தின் கீழ் இந்த பாடசாலை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தினர் நிர்மாண பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன, மாகாண அமைச்சர் சம்பத் ஸ்ரீ நிலந்த, பொலநறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related posts: