ஆசிரிய இடமாற்றங்களை இனிமேல் வருட இறுதியில் செயற்படுத்துங்கள்!

Wednesday, June 27th, 2018

நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் ஆசிரிய இடமாற்றம் மிக முறைகேடாகவே நடைபெறுகின்றது. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஆசிரியர்களின் எந்தவகையான இடமாற்றமாக இருந்தாலும் வருட இறுதியில் நடைபெற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ள இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தமது சங்கப் பொதுக்கூட்டத்தில் இதனைத் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்தது. இது தொடர்பில் சங்கம் அனுப்பிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

திருகோணமலையில் கடந்த 22 ஆம் திகதி இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இதுவும் ஒன்று. ஆசிரியர்களின் இடமாற்றங்கள் வருட இடைநடுவில் நடைபெறக்கூடாது. அவ்வாறு நடைபெற்றால் உரியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் இத்தகைய இடமாற்றங்கள் மிகமோசமாக நடைபெறுகின்றன.

மாகாணக் கல்வித் திணைக்களம் ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றங்களைப் புறக்கணித்து தமது எண்ணப்படி இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துகின்றது. அதனை தீர்மானங்களை முன்மொழிந்தவர்கள் சுட்டிக்காட்டினர்.

2017 ஆம் ஆண்டு இடமாற்றத்துக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் பெரிதும் ஏமாற்றப்பட்டதோடு பல தடவைகள் ஆசிரிய தொழிற்சங்கங்களை அழைத்து இடமாற்ற சபையை நடத்திவிட்டு இடமாற்றம் பெறும் ஆசிரியர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலும் வெளியிட்டுவிட்டு மாகாணக் கல்வித் திணைக்களம் இடமாற்றத்தை இரத்து செய்தது.

இது அடிப்படை மனித உரிமை மீறல். இதற்கு கிழக்கு மாகாணக்கல்விப் பணிப்பாளரே முழுக்காரணம் என்று எடுத்துரைக்கப்பட்டது. எனவே பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்காவிட்டால் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிவரும் என்றுள்ளது.

Related posts: