ஆசிரியர் போராட்டத்திற்கு தீர்வளிக்க பிரதமர் மஹிந்த இணக்கம் – தொழிற்சங்கங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் அறிவிப்பு!
Wednesday, October 13th, 2021ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு தீர்வாக இரண்டு கட்டங்களில் கீழ் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். ஆனாலும் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது..
முன்பதாக சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் 94 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் முதலாம் கட்ட சம்பளத்தை அதிகரிக்க முடியும் என்றும் அடுத்த இரண்டு பகுதிகளை 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வழங்க பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான ஒரு சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றிருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
மேலும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் உணர்வுபூர்வமாக செயல்படுவதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவையின் அடிப்படையில் அரசாங்கம் இந்த தீர்வை வழங்கி இருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன இச்சந்திப்பின்போது குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இன்றையதினம் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்திருந்தது.
இந்நிலையிலேயே இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பு குறித்து ஆராய்வதற்காக ஆசிரியர்கள் – அதிபர்களின் 31 தொழிற்சங்கங்கள் இன்று முற்பகல் கொழும்பில் கூடியிருந்தன.
இந்த சந்திப்பையடுத்து, தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|