ஆசிரியர் பணிக்கான அடையாள அட்டை வழங்குவதை இடைநிறுத்தியது கிளிநொச்சி கல்வி வலயம்!

Thursday, May 7th, 2020

கிளிநொச்சி கல்வி வலயத்தினால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அடையாள அட்டைகள் இன்றுமுதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கல்வி வலயத்தினால், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையில், தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு, சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் விவரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து அடையாள அட்டைகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களில் நேற்றைய தினம் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளரினால் ஆசிரியர்களுக்கான அடையாள அட்டை விநியோகம் இன்றுமுதல் நிறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை பல ஆசிரியர்கள் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே அடையாள அட்டைக்காக வலய கல்வி பணிமனையில் விண்ணப்பங்களை சமர்ப்பித்த போதும் அவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை என ஆசிரியர் தரப்பால் குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

“எமது தொழிலை உறுதிப்படுத்த ஆசிரிய அடையாள அட்டைகள் இல்லாதமையால் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம். அது தொடர்பில் பல தடவைகள் வலய கல்வி பணிமனைக்கு அறிவித்தோம். அடையாள அட்டைகள் விடயத்தில் தொடர்ந்து அசமந்த போக்கில் உள்ளனர். பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் போது கற்பித்தல் செயற்பாட்டுக்கு செல்வதற்கு எமக்கு அடையாள அட்டை கட்டாயம் தேவைப்படும்.

எனவே எமக்கான அடையாள அட்டைகளை விரைந்து தர வலய கல்வி பணிமனை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஆசிரியர்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை அடையாள அட்டை வழங்கப்படாமை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கவனத்திற்கும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கொண்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: