ஆசிரியர் இடமாற்றங்கள் வெளிப்படைத்தன்மையற்றது – இலங்கை ஆசிரியர் சங்கம்!

Friday, December 16th, 2016

மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயங்களின் 2017 ஆம் ஆண்டிற்கு உரிய வருடாந்த ஆசிரிய இடமாற்றங்கள் பாரபட்சமாகவும், சமத்துவமின்றிய நிலையிலும் இடமாற்றசபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாகாண இணைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமாகிய பொ.உதயரூபன் குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதவது,

தேசிய ஆசிரியர் இடமாற்ற கொள்கையின் சட்ட நியதிக்கு முரணாக மூன்றாம் தவணையில் தேவை கருதி இடமாற்ற சபையின் அனுமதியின்றி மட்டக்களப்பு கல்வி வலயத்தில் வழங்கப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்கள் யாவும் அரசியல் நிரல்களுக்கு அமைய பொதுச்சேவை ஆணைக்குழுவின் கட்டளைகளை மீறி நடைபெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பெரும்பாலான கல்வி வலயங்களின் வருடாந்த இடமாற்ற சபை நிறைவு பெறாத நிலையில் மாகாண கல்வி திணைக்களத்தின் வருடாந்த இடமாற்ற சபை நடைபெற்றுள்ளமை நம்பகத்தன்மை அற்றதும் வினைத்திறனற்ற செயற்பாடு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் இடமாற்ற சபையின் சட்ட நியாதிகளை மீறி விசுவாசமாக ஏற்றுக்கொண்ட புனிதமான அரசியல் அமைப்பின் அத்தியாயங்களை இவ்வாசிரியர் இடமாற்றங்களில் மீறி செயற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பல ஆசிரியர்கள் இவ்வெளிப்படை தன்மையற்ற ஆசிரியர் இடமாற்றங்களால் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மேல் நீதிமன்றங்களில் அடிப்படை உரிமைமீறல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வழக்குகளில் மாகாண கல்வி பணிப்பாளர், வலய கல்வி பணிப்பாளர்கள் மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர்(நிர்வாகம்) ஆகியோர் பிரதிவாதிகளாக குறிக்கப்பட்டுள்ளனர்.

இம்முறைகேடான ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பாக மாகாண ஆளுனர், பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக செயலாளர் பொ. உதயரூபன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ceylonteachersunion

Related posts:

மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர உத்தரவு!
இலங்கையில் ஒரே நாளில் 7 பேருக்கு கோரோனா தொற்று – யாழ்ப்பாணத்தில் நேற்றும் பதிவுகள் இல்லை என தெரிவிப்...
மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மீண்டும் திருப்பம் - ஜனாதிபதி ஆணையகத்திடம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ...