ஆசிரியர், அதிபர் வேதன பிரச்சினை தொடர்பில் ஆராய ஐவர் அடங்கிய குழு நியமனம்!

Tuesday, August 10th, 2021

ஆசிரியர், அதிபர்களின் வேதன பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து, அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கையிடுவதற்காக ஐவர் அடங்கிய அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த அமைச்சரவை உப குழுவில், அமைச்சர்களான மஹிந்த அமரவீர, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக உள்ளனர்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், ஆசிரியர் அதிபர் முன்னெடுத்துள்ள இணையவழிக் கற்பித்தல் புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை இன்று 29 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

தங்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்வரை, தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என ஊடகங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும், அரச மற்றும் தனியார்துறை தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: