ஆசியான் நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மேற்கொள்ள திட்டம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
Thursday, August 10th, 2023கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் பிராந்திய பரந்த பொருளாதார கூட்டிணைவில் (RCEP) அங்கத்துவம் பெற்று, ஏனைய ஆசியான் நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்தோ – பசுபிக் பிராந்தியம் தொடர்பான ‘ஆசியான்’ அமைப்பின் தொலைநோக்கு பார்வைக்கு தான் உடன்படுவதாகவும், அந்த தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற 56ஆவது “ஆசியான்” தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
1967 ஓகஸ்ட் 8 ஆம் திகதி தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ஆசியான்) இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கையொப்பத்துடன் தாய்லாந்தின் பெங்கொக்கிலுள்ள வெளியுறவு அமைச்சுக் கட்டிடத்தில் உருவாக்கப்பட்டது
புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மியான்மார், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய 10 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
ஆசியான் உறுப்பு நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி “ஆசியான் தினத்தை” கொண்டாடுகின்றன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அதிபர், ‘ஆசியான்’ அமைப்பில் நுழைவதற்கான முன்மொழிவு நிராகரிக்கப்பட்டதாகவும், அதன் அங்கத்துவம் கிடைக்காததால், அதற்கு மாற்றீடாக, பிராந்திய பரந்த பொருளாதாரக் கூட்டிணைவில் இணைந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|