ஆகஸ்ட் முதல் பலாலியிலிருந்து இந்தியாவுக்கான சேவை ஆரம்பம்!

Thursday, July 4th, 2019

சர்வதேச பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தப்படும் பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கான முதலாவது விமான சேவை ஆகஸ்ட் மாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முதல்கட்ட அபிவிருத்திப் பணிகள் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகத் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டின் மூன்றாவது பன்னாட்டு விமான நிலையமாக, பலாலி வானூர்தி நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நாளை வெள்ளிக்கிழமை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்து.

சுமார் 19.5 பில்லியன் ரூபா செலவில் பிராந்திய வானூர்தி சேவைகளை நடத்தக் கூடிய வகையில் பலாலி வானூர்தி நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இரு கட்டங்களாக பலாலி வானூர்தி நிலைய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஓடுபாதை விரிவாக்கம் மற்றும் தொடர்புடைய வசதிகளை மேற்கொள்வது முதலாவது கட்டப் பணிகளாக முன்னெடுக்கப்படும்.

வானூர்தி நிலையம் கணிசமான வானூர்திப் போக்குவரத்தை ஈர்த்தவுடன், இரண்டாவது கட்டமாக, நிரந்தரமான முனைய கட்டடங்கள் கட்டப்படும். பலாலி வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை, 3 ஆயிரத்து 500 மீற்றர் நீளம் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டு, ஏ320, ஏ321 போன்ற பெரிய பயணிகள் வானூர்திகள் தரையிறங்கக் கூடிய வசதிகள் செய்யப்படவுள்ளன.

Related posts: