அஸ்வெசுகம நலன்புரி திட்டம்“ – வங்கி கணக்குகளை திறக்க முந்தியடிக்கும் மக்கள் – சில இடங்களில் அமைதியின்மை சம்பங்களும் பதிவாகியிருப்பதாக தகவல்!
Wednesday, July 26th, 2023அஸ்வெசுகம நலன்புரி திட்டத்தின் நன்மையை பெற்றுக்கொள்ள தேவையான வங்கிக் கணக்குகளை திறப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சமூர்த்தி வங்கிகளுக்கு அருகில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
நாட்டில் வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் “அஸ்வெசும நலன்புரி“ திட்டத்திற்கு 206 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் ஊடாக நான்கு பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளது.
அதற்கமைய, தற்காலிக நெருக்கடி நிலைமைக்கு முகங்கொடுத்திருக்கும் 400,000 பேருக்கு மாதாந்த கொடுப்பனவாக 2 ஆயிரத்து 500 ரூபாவும், அதிக நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்திருக்கும் 400,000 பேருக்கு மாதாந்த கொடுப்பனவாக 5 ஆயிரம் ரூபாவும், வறுமை நிலைக்கு முகங்கொடுத்திருக்கும் 800,000 பேருக்கு மாதாந்த கொடுப்பனவாக 8 ஆயிரத்து 500 ரூபாவும், வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 ஆயிரம் ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாவும், சிறுநீரக நோயாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாவும், முதியவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீகிதம் மாதாந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
இந்நிலையில், இம்மாத இறுதிக்குள் முதலாவது கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும், ஆட்சேபனை முன்வைக்கப்பட்டுள்ளவைகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு தகுதியானவர்களுக்கு ஆகஸ்ட் மாதக் கொடுப்பனவுடன் சேர்த்து ஜூலை மாதக் கொடுப்பனவுடன் வழங்கு தயார் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அஸ்வெசுகம திட்டத்தின் முதல் கொடுப்பனவு தொகை இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும்.
இந்நிலையிலேயே இந்த கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக நாடு பூராகவும் வங்கிக் கணக்குகளை திறப்பதற்கு பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள வங்கிகளுக்கு அருகில் பயனர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், சில பகுதிகளில் அமைதியின்மை சம்பங்களும் பதிவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த திட்டத்தினை ஒத்திவைக்குமாறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|