அவன்ற் கார்ட் உடன்படிக்கை சட்டப்பூர்வமானதல்ல -கோப் அறிவிப்பு!

Saturday, August 20th, 2016

 

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் மற்றும் அவன்ற் கார்ட் நிறுவனம் என்பன செய்து கொண்டுள்ள உடன்படிக்கை சட்டப்பூர்வமானதல்ல என கோப் (COPE) எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான நிலையியற் குழு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த உடன்படிக்கை தொடர்பில், சட்ட மா அதிபரின் ஆலோசனைகளை மீண்டும் பெற்று பாதுகாப்பு செயலாளரினால் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென கோப் குழு சிபாரிசு செய்துள்ளது.

அரசாங்கத்தின் 19 நிறுவனங்கள் தொடர்பில் கோப் குழு மேற்கொண்ட விசாரணையின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் போது பல முக்கிய விடயங்கள் வெளியாகியுள்ளன.

ரக்னா லங்கா நிறுவனம், அவன்ற் கார்ட் நிறுவனத்துடன் 6 திட்டங்களுக்கு உடன்படிக்கை செய்துகொண்டுள்ளதுடன், அவற்றுக்கு திறைசேரியிலோ அல்லது பாதுகாப்பு அமைச்சின் பணிப்பாளர் சபையிடமோ அனுமதி பெறவில்லை என கோப் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த 6 உடன்படிக்கைகளுக்கும் பின்னர் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி அவன்ற் கார்ட் நிறுவனத்துடன் மீண்டுமொரு தடவை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் அதுவும் சட்டத்திற்கு முரணானது எனவும் கோப் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தப் பின்புலத்தில், தற்போதைய அரசாங்கத்திற்கு 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி அவன்ற் கார்ட் நிறுவனம் ரக்னா லங்கா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 255 மில்லியன் ரூபா நீக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு அவன்ற் கார்ட் நிறுவனத்தினால், ரக்னா லங்கா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகை 843 மில்லின் ரூபாவாகக் காணப்பட்டது.

அத்துடன், ரக்னா லங்கா நிறுவனத்திற்கும் அவன்ற் கார்ட் நிறுவனத்திற்கும் இடையில் அனுகூலமற்ற நிபந்தனையின் அடிப்படையில், இலாபம் பகிரப்பட்டுள்ளதாகவும் கோப் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு மொத்த வருமானத்தில் 12 வீதம் ரக்னா லங்கா நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டியிருந்த போதிலும், 2014 ஆம் ஆண்டு அது 7.5 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலாபத்தில் 75 வீதத்திற்கும் அதிகமான தொகையை அவன்ற் கார்ட் நிறுவனமே பெற்றுக்கொண்டுள்ளது.

Related posts: