அழுத்தம் கொடுத்ததாக நிரூபித்தால் பதவியை இராஜினாமா செய்ய தயார் – நீதி அமைச்சர் அலிசப்ரி!

Tuesday, November 24th, 2020

கொரோனா தொற்றினால் உயிரிழந்த எமது உறவினரை அடக்கம் செய்வதற்கு அழுத்தம் கொடுத்ததாக எவரும் நிரூபித்தால் பதவியை இராஜினாமா செய்ய தயாரென நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதாரண, இரத்மலானையில் கொரோனாவில் உயிரிழந்த தனது உறவினரை புதைக்க அமைச்சர் தலையீடு செய்ததாகவும் முதலில் பொசிடிவ் ஆன பெண்ணுக்கு இரண்டாவது தடவை பி.சி.ஆர் பரிசோதனை நடத்தி நெகடிவ் ஆக மாற்றி அவரை புதைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அண்மையில் குற்றம் சுமத்தி இருந்தார்.

இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் அலிசப்ரி மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா தொற்றினால் இறக்கும் ஏனையவர்கள் தகனம் செய்யப்படுகையில் நான் இறந்தால் என்னை மாத்திரம் புதைப்பதற்கு நான் ஒருபோதும் நடவடிக்கை எடுக்கமாட்டேன்.

நான் அவ்வாறு ஒருபோதும் கீழ்த்தரமான அரசியல் செய்வதற்கு வரவில்லை. அவ்வாறு செய்திருந்தால் பதவி விலகுவேன். அந்தவகையில் குற்றஞ்சாட்டியவர் பதவி விலக தயாராக இருக்கின்றாரா?

மேலும், புதைப்பது தொடர்பில் உலக நாடுகளில் காணப்படும் முன்னுதாரணப்படி இங்கும் மேற்கொள்ள முயற்சி செய்கிறோம். அதற்காக சட்டத்திற்கு மாற்றமாக எதுவும் செய்ய முயலவில்லை” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: