அறிவிலித்தனமாக நடந்துகொள்ளும் வடமாகாணக் கல்வித்திணைக்களம் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்!

Saturday, January 13th, 2018

எங்கும் நடைபெறாத வகையில் வடக்கு மாகாணத்தில் 2018 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பித்தவுடனேயே மாகாணக் கல்வித் திணைக்களம், பரீட்சைகள் நடத்தும் செயற்பாட்டை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்து எச்சரிக்கை செய்கிறது.

சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் கே.நல்லதம்பி அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திக்குறிப்பில் மேலும் உள்ளதாவது:

பாடசாலைகள் கற்றல் நடவடிக்கைகளுக்காக ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பமானது. பாடசாலை ஆரம்பமாகி பிள்ளைகள் புதிய வகுப்புகளில் நிலை கொள்ள முன்னரே பரீட்சையை நடத்துகின்றது வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்.

அதுவும் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு பரீட்சையை நடத்துவது என்பது அறிவிலித்தனமான செயற்பாடு. பரீட்சை என்றாலே எல்லோருக்கும் பதற்றம். அதிலும் குழந்தைகளுக்கு பரீட்சைகளை நடத்துவது உளவியல் ரீதியாக எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மாகாணக் கல்வித் திணைக்களம் அறியாதிருப்பது பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அவநம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது.

வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் இதுபோன்ற அறிவிலித்தனமான பல செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாக இருந்தால் பல விடயங்களை வெளிப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தயங்காது. மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஆரம்பப் பிரிவுக்குப் பொறுப்பான பணிப்பாளரின் துறைசார் திறமையையும் பரிசோதிக்கும் நிலை ஏற்படும். ஏற்கனவே மாகாணக் கல்வித் திணைக்களம் நடத்திய பரீட்சைகளில் பல குறைபாடுகள் இருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் தாங்கள் நினைத்ததை நடத்துவோம் என மாகாணக் கல்வித் திணைக்களம் கங்கணம்கட்டி நிற்பது ஆபத்தானது என்பதனையும் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.

அதேநேரம் ஆசிரியை ஒருவருக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் வழங்கப்பட்ட இடமாற்றம் நீதிமன்றத்தால் இரத்துசெய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பல செயற்பாடுகள் சட்டத்துக்குப் புறம்பாக வடக்கு மாகாணத்தில் நடைபெறுவதும் புதிதான ஒன்றல்ல.

இது பற்றி நாம் அவ்வவ்போது சுட்டிக் காட்டினாலும் அவை திருத்தப்படுவதாக இல்லை.ஆனாலும் இவை தொடராமல் இருப்பதற்கும் தவறுகள் நடைபெறாமல் இருப்பதற்கும் மாகாணக் கல்வி அமைச்சு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுள்ளது.

Related posts:

தகவல் அறியும் உரிமை தொடர்பில் மக்கள் புரிந்து வைத்திருப்பது அவசியம் - அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம...
நாடாளுமன்ற அமர்வுகளை தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடத்த முடிவு - நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவி...
திரவ இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க மின்சார சபைக்கு 10 ஏக்கர் நிலம் கொள்வனவு - அமைச்ச...