அறிக்கைகளை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பு

Tuesday, November 7th, 2017

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை கர்ப்பிணிப்பெண் படுகொலை வழக்கு தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து புலன் விசாரணை அறிக்கைகளையும் மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஊர்காவற்றுறை கரம்பொன் பிரதேசத்தில் வீட்டில் தனித்திருந்த ஏழு மாத கர்ப்பிணிப்பெண் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டிருந்தார். இதன் போது கருவுற்றிருந்த ஏழு மாதக் குழந்தையும் உயிரிழந்திருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது.

நேற்று நடைபெற்ற வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கடந்த வழக்கு தவணைகளின் போது இச் சந்தேக நபர்கள் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் மருதனார்மடப் பிரதேசத்தில் நின்றதாக கூறி சிசிரிவி காணொளி ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அக் காணொளியானது மருதனார்மடப் பிரதேசத்தில் பெறப்பட்டதல்ல எனவும் அது ஊர்காவற்றுறைப் பிரதேசத்திலேயே பெறப்பட்ட காணொளி  எனவும் குறிப்பிட்டார்.

மேலும் இவ்வாறு காணொளியை மன்றுக்கு சமர்ப்பித்து மன்றை சந்தேக நபர்கள் தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து மன்றானது குறிப்பிடுகையில் அவ்வாறு சந்தேக நபர்கள் மன்றை தவறாக வழிநடத்த முயற்சித்தால் அதற்குரிய பலனை அவர்கள் அனுபவிப்பார்கள் என குறிப்பிட்டது.

அதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து புலன் விசாரணைகள் தொடர்பான அறிக்கைகளையும் அடுத்த தவணையின் போது மன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இவ்வழக்கின் சந்தேக நபர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும்

அது வரை இவ்வழக்கை ஒத்திவைக்கவும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டார்.

Related posts: