அரிசி மாபியாக்கள் முன்னெடுக்க இருக்கும் முயற்சியை தோற்கடிப்பதற்கே அரிசி இறக்குமதிக்கு அனுமதி – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

புத்தாண்டு காலத்தில் அரிசி மாபியாக்கள் முன்னெடுக்க இருக்கும் முயற்சியை தோற்கடிக்கும் வகையில் அரிசி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
வர்த்தகத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசாங்கம் தேசிய உற்பத்திகளை மட்டுப்படுத்தி அரிசியை பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்தன குறிப்பிட்டுள்ள கருத்து அடிப்படையற்றதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தாக்கத்தின் காரணமாக உலகலவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு மத்தியில் பொதுமக்களுக்கு நிவாரண அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்கள் விமர்சிக்கப்படுவது தவறானதாகும்.
கொரோனா தாக்கத்தை போன்று பூகோள தாக்கம் காணப்படாத நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் 2015 ஆம் ஆண்டு 286,000 மெற்றிக்தொன், 2016 ஆம் ஆண்டு 29,000 மெற்றிக்தொன், 2017 ஆம் ஆண்டு 745,000 மெற்றிக்தொன், 2018 ஆம் ஆண்டு 249,000 மெற்றிக்தொன், என்ற அடிப்படையில் அரிசி இறக்குமதி செய்யப்பட்டன.
அரிசி உள்ளிட்ட தேசிய உற்பத்திகளை இறக்குமதி செய்வது மட்டுப்படுத்தபடும் என்பது சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தின் இலக்காக காணப்பட்டது. அதற்கமைய அரிசி இறக்குமதி 2019 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது.
சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் உள்ளிட்ட ஏனைய தேவைகளை கருத்திற் கொண்டு 2019 ஆம் ஆண்டு 24 ஆயிரம் மெற்றிக்தொன், 2020ஆம் ஆண்டு 16 ஆயிரம் மெற்றிக்தொன் என்ற அடிப்படையில் அரிசி இறக்குமதி செய்யப்பட்டன.
இந்நிலையில் புத்தாண்டு காலத்தில் சந்தையில் ஒருகிலோகிராம் அரிசியின் விலையை 300 ரூபா வரை அதிகரித்து மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி அதனூடாக அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசி மாபியாக்கள் முன்னெடுத்த முயற்சியை முறியடிக்கும் வகையில் தற்காலிகமாக அரிசி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
லங்கா சதொசவில் இறக்குமதி செய்யப்படும் நாடு வகையிலான அரிசி ஒரு கிலோகிராம் 105 ரூபாவிற்கும்,சம்பா அரிசி 130 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும்.
அதேநேரம் நுகர்வோர் அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை லங்கா சதொச விற்பனை நிலையங்களில் நிவாரண விலை அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம்.
அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகிக்கும் நடமாடும் சேவையினை சதொச நிறுவனம் முன்னெடுத்துள்ளது. 20 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதி லங்கா சதொச நிறுவனத்தில் 3,998 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. நுகர்வோர் 1998 என்ற விசேட இலக்கத்திற்கு அழைத்து இச்சேவையினை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|