அரிசி கொள்வனவில் ஊழல்: கணக்காய்வாளர் அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?
Sunday, November 19th, 2017
நாட்டில் ஊழலில் ஈடுபட்ட அரசியல்வாதிகளது விபரம் வெளிவரும் என்பதாலேயே தேசிய கணக்காய்வு சட்டம் கொண்டுவரப்படுவதைத் தடுக்க பலர் முயற்சிப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
கணக்காய்வாளர் நாயகம் ஏற்கனவே சமர்ப்பித்த அறிக்கையின் பிரகாரம், லக் சதொச நிறுவனத்தின் முறையற்ற அரிசி கொள்வனவினால் மாத்திரம் நாடு 15 பில்லியன் ரூபாவை இழந்துள்ளது. சதெச அரிசி கொள்வனவில் ஏற்பட்ட 15 பில்லியன் ரூபா இழப்பீடு தொடர்பில் கணக்காய்வாளரின் அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகளில் நலிவுகள் அவதானிக்கப்பட்டதாக கணக்காய்வாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(அ) நிறுவகத்தின் தகவல் முறைமைக்குள் சகல விற்பனை நிலையங்களும் களஞ்சியங்களும் இணைக்கப்பட்டிராமை
(ஆ) களஞ்சியங்களில் முறையான இருப்புக் கட்டுப்பாட்டு முறையொன்று செயற்படுத்தப்பட்டிராமை
(இ) கணக்கீட்டு நடவடிக்கைகளின் போது முறையாக வருமானங்களும் செலவீனங்களும் வகைப்படுத்தப்பட்டு, இதற்காக ஓர் கோவையொன்று
பேணப்படுவது நலிவான நிலையில் காணப்பட்டமையால், நிதிக்கூற்றுகளைத் தயாரிப்பதில் பாரிய தாமதம் நிலவியமை
(ஈ) உயர் முகாமைத்துவத்தில் பெரும்பாலான பதவிகள் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்பட்டிருந்தமையால், நிறுவகச் செயற்பாடுகள்தொடர்பில் பொறுப்பு நலிவான நிலையில் காணப்படல்
(உ) உள்ளகக் கணக்காய்வு வினாக்களுக்கு பதிலளித்தல் மற்றும் நடவடிக்கை எடுத்தல் போதியளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
(ஊ) நிறுவகத்தின் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுகையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் பணிப்பாளர் சபையின் தேவைக்கேற்ப இடம்பெற்றிராமை
(எ) நிறுவகத்திற்கு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுகையிலும் விலகிச் செல்கையிலும் உத்தியோகப்பூர்வ கோவைகள் எழுத்து மூலமாக
முறைப்படி ஒப்படைக்கப்படல் மற்றும் பொறுப்பேற்றல் நலிவான நிலையில் காணப்பட்டமை
(ஏ) கொள்வனவு நடைமுறைகளின் போது அரசாங்கக் கொள்வனவு வழிகாட்டலுக்கு மாறாக நடவடிக்கை எடுக்கப்பட்டமை
(ஐ) நிறுவக உத்தியோகத்தர்களுக்கு எழுத்து மூல பணி ஒப்படைகள் வழங்கப்பட்டிராமை
என்பன கணக்காய்வாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அறிக்கையில் எடுத்துக்கூறப்பட்டுள்ள 15,157,031,018 ரூபா நட்டத்திற்காக பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் இனங்காணப்பட வேண்டியதுடன், எதிர்காலத்தில் அத்தகைய நட்டங்கள் ஏற்படாத வண்ணம் கொள்வனவு நடைமுறைப்படுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2018 வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு மற்றும் வட கிழக்கு மாகாணத்தில் கடன் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளவர்களுக்கு சிறிய வட்டியினாலான கடன் வசதிகள் வழங்குவதற்கு, ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனினும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கீழ் இயங்கும் சதொச நிறுவனத்தின் முறையற்ற அரிசி கொள்வனவினால் மாத்திரம், 2018 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் சிறிய வட்டியிலான கடன் வசதிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையைவிட 15 மடங்கு ஊழல் இடம்பெற்றுள்ளது. சதொச அரிசி கொள்வனவில் ஊழல் நடந்திருப்பதாக கணக்காய்வாளர் அறிவித்திருந்தும், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Related posts:
|
|