அரபிக்கடல் பகுதியில் ‘டவ்டே’ புயல் – இந்தியாவின் 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை !

Saturday, May 15th, 2021

அரபிக்கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால், தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு நிலையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவுகள் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் உருவானது.இது, இன்று மேலும் வலுவடைந்து புயலாக மாறி அடுத்த, 24 மணி நேரத்தில் குஜராத் – பாகிஸ்தான் கடல் பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.’டவ்டே’ “Tauktae” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், வரும் 18ம் தேதி மாலை, குஜராத் கடல் பகுதியை அடையும் என்று  எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை  ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், நாளை கன மழை பெய்யும். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.

இதையடுத்து, ஐந்து மாநிலங்களிலும் மீட்பு பணிகளில் ஈடுபட, தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த, 53 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் ‘தவுக்தே’ புயல் காரணமாக, கனமழை கொட்டும் என்றும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், தமிழகம், கேரளாவில், புயல் மழையால் பாதிக்க வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில், கோவை மாவட்டத்துக்கு, 44 பேர் கொண்ட இரு குழுவினர் வந்துள்ளனர். இவர்கள், துடியலுார் அருகே முகாமிட்டுள்ளனர். இதேபோல, மதுரைக்கும் இரு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts: