அரச வேலைவாய்ப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை –  வேலையற்ற பட்டதாரிகள் திட்டவட்டம்

Saturday, July 15th, 2017

எமக்கான அரச வேலைவாய்ப்பை அரசாங்கம் முழுமையாக உறுதிப்படுத்தும் வரை நாம் எமது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நிரந்தர அரச வேலைவாய்ப்பை வலியுறுத்தி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த காலவரையற்ற போராட்டம் தீர்வின்றித் தொடர்கிறது.  போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள பட்டதாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்திலுள்ள 3500 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமெனக் கோரி நாம் கடந்த பெப்ரவரி மாதம்-27 ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகக் காலவரையற்ற போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தோம்.

எமது போராட்டம் கடும் வெப்பம், மழை, கடும் காற்று, வாகனங்களின் புகை எனப் பல்வேறு புறப் பாதிப்புக்களுடன், உடல், உள ரீதியான பாதிப்புக்களையும் தாண்டி 138 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது. நாங்கள் எந்தவித வன்முறைகளிலும் ஈடுபடாது எங்களுடைய அடிப்படைத் தொழிலுரிமையை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்.

இந் நிலையில் மாவட்ட அடிப்படையில் பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக  பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும், அமைச்சரவைத் துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக நேற்று முன்தினம் புதன்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் கருத்து மகிழ்வைத் தருகிறது. ஆயினும், கடந்த யூன் மாதம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினோம். அப்போது வடக்கில் ஆயிரம் பட்டதாரிகளுக்கும், கிழக்கில் ஆயிரம் பட்டதாரிகளுக்கும்  வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடவுள்ளதாக இருவரும் வாக்குறுதியளித்திருந்தனர்.  ஆனால், இதுவரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் ஒரு வருடப் பயிற்சியின் பின்னர்  மாவட்ட அடிப்படையில் பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமையை நாம் வரவேற்கிறோம்.

ஆனாலும், பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டு  அரச வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான காலப்பகுதி அறியத்தரப்படவில்லை. அதற்காக நாங்கள் காத்திருக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.  அதுமாத்திரமின்றி வடக்கு, கிழக்கிற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் எப்போது வெளியிடப்படும் என்பதிலும் உறுதியற்ற தன்மையே காணப்படுகின்றது. ஆகவே, எங்களுக்கான சாதகமான உறுதிமிக்க தீர்வு வழங்கப்படும் வரை எமது போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.

Related posts: