அரச வரி வருமானத்தின் 86% வீதமான தொகை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கே செலவிடப்படுகிறது – வர்த்தக அமைச்சர் சுட்டிக்காட்டு!

Thursday, July 22nd, 2021

அரச வரி வருமானத்தின் 86% வீதமான தொகை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கு செலவிடப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமாயின் பொதுமக்கள் மீது சுமத்தப்படும் வரி அதிகரித்தல், அரச சொத்துக்களை விற்பனை செய்தல் அல்லது கடன் வாங்குதற்கு நேரிடுமெனவும் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு கிடைத்த வரி வருமானம் 1,216 பில்லியன் ரூபாய்களாவதுடன், அதில் 1,052 பில்லியன் ரூபாய்கள் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும், அரச ஊழியர்களின் சம்பளக் கொடுப்பனவு செலுத்திய பின்னர் வரி வருமானத்தில் அரசாங்கத்திற்கு 164 பில்லியன் ரூபாய்கள் மாத்திரமே எஞ்சுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற டுவாழ்க்கைச் செலவு, பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்புடு தொடர்பாக பொது மக்களைத் தெளிவூட்டும் செய்தியாளர் கலந்துரையாடலில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஆசிரியர் சேவையை இணைந்த சேவையாக மாற்றி சம்பளம் தொடர்பான ஆணைக்குழுவை நியமித்து பரந்த உரையாடல் மூலம் ஆசிரியர்கள் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

மேலும் உலகில் செல்வந்த, வறுமைப்பட்ட மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட அனைத்து நாடுகளும் சமகால தொற்று நோய் நிலைமையால் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இலங்கை போன்ற சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளுக்கு இது பொதுவான விடயமென்பதையும் சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய ரீதியில் பரவியுள்ள தொற்று நிலைமையால் 04 மில்லியன்களுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மூடப்பட்டிருக்கும் இந்நிலைமையில் முழு உலகிலும் விநியோகச் செயன்முறை தடைப்பட்டு உற்பத்தி, நுகர்வு முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமையையும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் இத்தொற்று நிலைமையால் உலகம் முழுவதிலும் பசி, போசாக்கின்மை அதிகரித்து வறுமை அதிகரித்துள்ள இவ்வேளையில், இலங்கைக்கு மாத்திரமல்ல அனைத்து நாட்டிற்கும் நிதி முகாமைத்துவம் கடினமான சவால்மிக்கதாக அமைந்துள்ளதெனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அதேநேரம் அரச நிதி தொடர்பான பிரச்சினை, அந்நிய செலாவணிப் பிரச்சினை, பொருளாதார வீழ்ச்சி போன்ற முக்கிய பிரச்சினைகள் மூன்றுக்கும் இலங்கை மாத்திரமல்ல உலகிலுள்ள அனைத்து நாடுகளும் முகங்கொடுக்கின்றமையை இதன்போது அமைச்சர் பந்துல குணவர்த்தன சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனிடையே கடந்த அரசாங்கத்தினால் 6 ட்ரல்லியன் ரூபா வெளிநாட்டு கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவ்வாறான கடன்கள் எதனையும் பெற்றுக் கொள்ளப்படவில்லை என எதிர்க்கட்சியில் எவரேனும் கூறுவார்களாயின் அது தொடர்பில் விவாதிக்க முன்வருமாறு அவர் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: