அரச நிறுவனங்களை தனியார்துறைக்கு விற்பனை செய்வது எமது கொள்கையல்ல –  ஜனாதிபதி

Wednesday, August 10th, 2016

அரச நிறுவனங்களை தனியார் துறைக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தயாராகி வருவதாக சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டபோதும் அரச நிறுவனங்களை விற்பனை செய்வது தமது அரசாங்கத்தின் கொள்கையல்ல என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களாக இருந்தால் அவற்றின் வருமானத்தை அதிகரித்து இலாபம் ஈட்டும் நிலைக்கு கொண்டுவருவதற்கு எடுக்க வேண்டிய தீர்மானங்களை எடுப்பதோடு, சில சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக தனியார் துறையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதேயன்றி ஒருபோதும் அந்த நிறுவனத்தை தனியார்துறைக்கு விற்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தள்ளார்.

இலங்கைத் துறைமுக அதிகார சபையின் CFS 1 கப்பற்சரக்கு கொள்கலன்கள் செயற்பாட்டு மத்திய நிலையத்தை இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய பொருளாதாரத்தின் இதயமாக இருந்துவரும் கொழும்பு துறைமுகம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு வழங்கும் உயர்ந்த பங்களிப்புகளை இதன்போது பாராட்டிய ஜனாதிபதி, துறைமுகத்தை மென்மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் வழங்கவேண்டிய எல்லா பங்களிப்புகளையும் வழங்கும் எனத் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகம் நட்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனம் அல்லாதபோதும் அதிலிருந்து கிடைக்கும் எல்லா வருமானங்களும் முழுமையாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கடனை செலுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை இதன் அபிவிருத்திக்கு தடையாக உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

9 இலட்சம் கோடி கடன் சுமை இன்று நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தபோதும் எமது தேசிய தொழிற்துறையையும் ஏற்றுமதித் துறையையும் மேலும் முன்னேற்றி நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை அதிகரித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts: