அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவதற்கு 5 ஆண்டுகள் விடுமுறை – இயலுமை குறித்து 7 பேர் கொண்ட குழு ஆராய்ந்து இரு வாரங்களில் அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை!

Friday, June 24th, 2022

அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவதற்கு 5 ஆண்டுகள் விடுமுறை வழங்குவதற்கான புதிய திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. அத்துடன் இதன் இயலுமை குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

2 வாரங்களில் அமைச்சரவைக்கு இதுதொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து அரச ஊழியர்கள் வெளிநாட்டு வேலைக்காக செல்வதற்காக வழங்கப்படும் 5 வருட விடுமுறை தொடர்பில் விசேட சுற்றறிக்கை நேற்றுமுன்தினம் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்தது.

ஓய்வூதியம் பாதிக்காத வகையில் அதிகபட்சமாக 5 வருட விடுமுறையானது அரச ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது..

இதேவேளை 35 வயதுக்குட்பட்ட அரச ஊழியர்களுக்கு தகவல் தொழிநுட்ப அறிவு, ஆங்கிலம் அல்லது வேறு ஏதேனும் மொழி அறிவை வளர்த்துக் கொள்ள அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தொழிற்பயிற்சியை முடிக்க அதிகபட்சம் ஒரு வருட விடுமுறை வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லும் அரச ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை, அவர்களின் பெயரில் தொடங்கப்பட்ட குடியுரிமை இல்லாதோர் கணக்கு மூலம் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அரச ஊழியர்களை வேலைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவது தொடர்பிலான திட்டம் கடந்த 20 ஆம் திகதிமுதல் 2 வாரங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான சுற்றுநிரூபம் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டிருந்தது.

அதில், அரச செயற்பாடுகளை வீழ்ச்சியடையாது தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்காக மட்டுப்படுத்தப்பட்ட பணிக்குழாமினரை கொண்டு சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2 வாரங்களுக்கு இந்த நடைமுறை செயற்படுத்தப்படவுள்ளது. குறைந்தளவான பணிக்குழாமினரை சேவைக்கு அழைக்கும் போது, சுழற்சி முறை மற்றும் வேறு ஏதேனும் பொறிமுறைமையை பின்பற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கட்டாய சேவைக்கு அழைக்கப்படுகின்ற நாட்களில் சேவைக்கு சமுகமளிக்காத ஊழியர்களது பணிநாள், தனிப்பட்ட விடுமுறையில் கழிக்கப்படும். அதேநேரம், அனைத்து அரச ஊழியர்களும் இணையவழியில் தொழிலாற்றுவதற்கு எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: