அரச உத்தியோகத்தர்கள் குறுகிய காலத்திற்கு துயரங்களை சகித்துக் கொண்டேனும் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் – அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை!

Tuesday, April 25th, 2023

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்திற்கேற்ப செயற்படாமல் வரி சலுகைகள் குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியாது.

எனவே அரச உத்தியோகத்தர்கள் குறுகிய காலத்திற்கு துயரங்களை சகித்துக் கொண்டேனும் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு (25) இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச நாணய நிதியம் என்பது சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனமாகும். எனவே அதன் நிபந்தனைகள் மற்றும் யோசனைகள் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு முறையான வழிமுறைகள் உள்ளன. அவற்றுக்கு புறம்பாக எம்மால் செயற்பட முடியாது.

நாணய நிதியத்தின் ஆரம்ப நிபந்தனைகளில் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்கள் பல உள்ளன. அவற்றில் பிரதானமானது சர்வதேச கடன்களுக்கான வட்டியை செலுத்தக் கூடிய திட்டமிடலை சமர்ப்பிப்பதாகும்.

இதன் மூலம் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு வரி சலுகை வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும்.

எனினும் ஒப்பந்தத்தின் படி செயற்பட்டால் மாத்திரமே பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும். இதற்கு முன்னர் 16 சந்தர்ப்பங்களில் நாம் சர்வதேச நாணய நிதியத்தை ஏமாற்றியுள்ளோம்.

இம்முறை அவ்வாறு ஏமாற்ற முடியாது. சர்வதேச மட்டத்தில் பொருளாதார ரீதியில் நம்பிக்கையை உருவாக்குவதற்கு ஒப்பந்தத்திற்கமைய செயற்பட வேண்டும். எனவே துன்பங்களை சகித்துக் கொண்டேனும் இவற்றுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றுமு; அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: