அரசுக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தினால் நிராகரிப்பு!
Saturday, November 26th, 2016தற்போதுள்ள அரசாங்கம் அரசியல் அமைப்பின் பிரகாரம் சரியான முறையில் நியமிக்கப்படவில்லை. நியமிக்கப்பட்ட அரசாங்கம் தேசிய அரசாங்கம் அல்ல என அறிவிக்குமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது.
இதன்படி இந்த மனுவை கட்டணங்களின்றி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே உச்ச நீதிமன்றம் ரத்துச் செய்தது.
உச்ச நீதிமன்ற நீதியரசர்களான பிரியசாத் டெப், புவனக அலுவிகார மற்றும் சிசிர த ஆப்ரூ ஆகியோரடங்கிய அமர்வே இம்மனுவை நேற்று நிராகரித்தது.
சட்டத்தரணி உனவட்டுனகே அருண லக்சிறி என்பவர் இம்மனுவை தாக்கல் செய்திருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இதில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெற்ற தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் என்ற பெயரில் புதிய அரசு நிறுவப்பட்டது என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தேசிய அரசாங்கம் என்பதை அரசியலமைப்பின் 46 (05) யாப்பின் பிரகாரம் வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த யாப்பின் பிரகாரம் 30 பேரை கொண்ட அமைச்சரவை இருக்க வேண்டும். இருப்பினும் மனு தாக்கல் செய்யப்படும் போது அமைச்சரவையில் 48 பேர் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு தொகையான அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையை கொண்டு நடத்துவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பாரிய அமைச்சரவை முன்னெடுத்துச் செல்வது அரசியலமைப்புக்கு முரணானது. எனவே அரசியலமைப்பின் 12 (01) மற்றும் 14 (அ) ஆகிய சரத்துகளினூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதென அறிவிக்குமாறு மனுதாரர் கோரியிருந்தார்.
Related posts:
|
|