அரசியல் காரணங்களால் அதிபர் நியமனம் தாமதம் – வடக்கு மாகாண புதிய அதிபர் சங்கம் தெரிவிப்பு!

Wednesday, December 14th, 2016

புதிய அதிபர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டபோது, பதில் கடமையாற்றிய அதிபர்கள் தமது பொறுப்புகளை ஒப்படைக்கத் தயாராகவே இருந்தனர். அரசியல் ரீதியாகவும், கல்வி நிர்வாக ரீதியிலும் வழங்கப்பட்ட ஆதரவும், தூண்டுதலும் நியமனத்தை சிக்கலாக்கியது. எமக்கு விரைவில் பொறுப்புக்கள் ஒப்படைக்க வேண்டும் என வடக்கு மாகாண புதிய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிபர் சேவைக்கு நியமனம் பெற்றவர்களுக்கு பாடசாலைப் பொறுப்புக்கள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவது தொடர்பாக அறிக்கை ஒன்றைச் சங்கம் வெளியிட்டுள்ளது. அதிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டு அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பில் குறிப்பிட்டுள்ள நடைமுறைக்கமைய கட்டமைக்கப்பட்ட முன்வைப்பு நேர்முகத்தேர்வு என்பவற்றில் தோற்றி வட மாகாணத்துக்கு 398 பேர் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுக்கு 180 மணித்தியாலங்கள் கொண்ட பயிற்சி ஒன்ரறை மாதங்கள் நடத்தப்பட்டு, அதன் பின்பு மீளக் கட்டமைக்கப்பட்ட முன்வைப்பும் மற்றும் பாடசாலை சம்பவ கற்கை தொடர்பான எழுத்துப் பரீட்சை நடத்தப்பட்டு அதன் பெறுபேற்றுக்கு அமைய 393 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 09.05.2016ஆம் திகதி செயற்படும் வண்ணம் நியமனம் வழங்கப்பட்டது.

தற்போது கட்டம் கட்டமாக ஒருவார கால வெளிநாட்டுப் பயிற்சி புதிய அதிபர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. சேவைப் பிரமாணக் குறிப்பில் குறிப்பிட்டதற்கமைய தடை தாண்டல் பரீட்சை EB விண்ணப்பம் கோரப்பட்டு அரசதாபன விதிக்கோவைகள் அரச நிதிப் பிரமாணம் தொடர்பான பரீட்சையும் நடைபெறவுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இந்த அதிபர்களுக்கு பாடசாலைகளில் பொறுப்புக்கள் வழங்க தயக்கம் காட்டி வந்தது வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு.  இதன் பின்னணியில் அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

புதி அதிபர்களுக்கு பொருத்தமான வகை 111 பாடசாலைகள் அனைத்திலும் பதில் அதிபர்கள் கடமையாற்றி வருவதால் அவர்கள் பொறுப்புக்களை புதிய அதிபர்களுக்கு கையளிக்கச் செய்ய கல்வி அமைச்சு விரும்பவில்லை. இந்தப் பிரச்சினை வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு நாடு முழுவதும் எழுந்தபோது மத்திய கல்வி அமைச்சர் மற்றும் ஆசிரியர் சங்கம் என்பன முனைப்புடன் செயலாற்றி புதிய அதிபர்களுககு பாடசாலைகளைப் பெற்றுக் கொடுக்கவும் பதில் அதிபர்களுக்கு பாதகம் ஏற்படாமலும் நாடாளுமன்றத்திற்கு இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டு அதற்குப் பிரதமர் தலைமையில் உபகுழு ஒன்று அமைக்கப்பட்டு பிரச்சினைகள் ஆராயப்பட்டு அசைசரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டது.

இந்த அமைச்சரவைப் பத்திரம் ஒக்டோபர் மாதம் வெளிவந்து புதிய அதிபர்கள் நியமனம் தொடர்பாக மகாணப் பாடசாலைகளில் அதிபர்களாக நிலைப்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் இந்த நியமனம் தொடர்ந்து கால தாமதத்துடன் நடவடிக்கை எதுவும் இன்றி இழுபறியில் உள்ளது. இதற்குத் தற்போதும் அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதே காரணமாக உள்ளது, எதிர்வரும் ஆண்டிலாவது நாம் கடமைப் பொறுப்பை ஏற்க வடக்கு மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

principals-message-1

Related posts: