அரசியல்வாதிகள் மீது மட்டும் விரல் நீட்டக் கூடாது. நாட்டில் வருமான வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் தேடிப் பார்க்க வேண்டும் – அலி சப்ரி வலியுறுத்து!

Saturday, May 21st, 2022

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அனைவரும் இணைந்து பொறுப்புடன் செயற்பட வேண்டுமே தவிர குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எரியும் நெருப்பில் வைக்கோலைப் போட முற்பட வேண்டாம் என வலியுறுத்தியுள்ள முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி, அரசியல் நோக்கங்களைக் கைவிட்டு அனைவரும் உண்மை நிலையை உணர்ந்து செயற்படுவதற்கு முன்வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாட்டின் பொருளாதாரம் உக்கிரமடைந்துள்ள நிலையில் மக்கள் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். அந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பது எவ்வாறு என்பது தொடர்பிலேயே நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் சிந்திக்க வேண்டும். இனியும் அரசியல் நோக்கங்களுக்காக  ஒருவர் மீது ஒருவர் விரல் நீட்டிக் கொண்டு செயற்பட முற்படக்கூடாது. 

அவ்வாறானால் நாம் விஜயன் காலத்திலிருந்தே அதை செய்யவேண்டிவரும். நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கையுடனேயே நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டோம்  நம்பிக்கையுடனேயே 69  இலட்சம் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தனர்.

நான் அமைச்சர் பதவியை பொறுப்பேற்பதற்கு முன்னர் 42 மில்லியன் ரூபா வருமான வரி  நிலுவையை செலுத்திவிட்டே பதவியை பொறுப்பேற்றேன்.  அரசியல் மூலம் நான் ஒரு சதம் கூட உழைக்கவில்லை. ஆனால்  வீடு எரிவதைப் பார்த்து  மகிழ்ச்சியடையும் தரப்பினரையும் நான் பார்க்கின்றேன்.

அந்தளவு மோசமான கலாசாரம் எமது நாட்டில் தலைதூக்கி இருக்கின்றது. இதன் பின்னர் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு நான் நினைக்கமாட்டேன். சுற்றுலாத்துறை மூலம் 2018ஆம் ஆண்டு  4.4 பில்லியன் வருமானமாக கிடைத்தது. 23 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்தனர் இப்போது அவை இல்லாமல் போயுள்ளன.  51 பில்லியன் டொலரை கடனாக செலுத்த வேண்டியுள்ளது.

கடன் பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறன.  சாதகமாக முன்னெடுக்க முடியும்  என்று நம்பிக்கை இருக்கின்றது. விரைவில் அது தொடர்பான சட்ட ரீதியான ஆலோசனைகள் மற்றும் நிதி ரீதியான ஆலோசனைகளுக்கான குழுக்கள் அமைச்சரவையினால் நியமிக்கப்படும்.

அரசியல்வாதிகள் மீது மட்டும் விரல் நீட்டக் கூடாது. நாட்டில் வருமான வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் தேடிப் பார்க்க வேண்டும். சுங்கத் திணைக்களத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் வருமான வழிமுறைகள் தொடர்பில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு மெகாவாட் மின்சாரத்திற்கு 43 ரூபா செலவாகிறது. சூரியசக்தி மூலம் அதனை உற்பத்தி செய்தால் 15 ரூபாவுக்கு அதனை குறைத்துக் கொள்ள முடியும். அதற்கு பங்களிப்புக்களை வழங்க முன்வர வேண்டும்.

அரசாங்கத்தையும் அமைச்சர்களையும் மட்டும் பார்த்துக்கொண்டிருக்காமல் வாய்ப்புகள் உள்ளவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பை வழங்கலாம். அவ்வாறு முன்வந்தால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் . நாட்டின் அனைத்து பிரச்சினைக்கும் 225 பேரும் மாத்திரம் பொறுப்புக்கூறவேண்டியதில்லை.

நாட்டின் உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும். பொய்யால் தீர்வுகாண முடியாது. நாட்டின் மொத்த வருமனத்தைவிட செலவு அதிகம். அதனால் நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: