அரசியலில் எனது இறுதி நாட்களில் இருக்கிறேன் என்பதை நான் அறிவேன் – ஆனால் நிதி அமைச்சராக இருந்து செய்ய வேண்டியதை செய்வேன் – அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, April 9th, 2022

எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும், நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற, நிதி அமைச்சராக இருந்து, தேவையானதைச் செய்ய தயாராக இருப்பதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்..

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் நேற்றையதினம் இடம்பெற்றது இதன்போது புதிய அமைச்சர்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் நிதியமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

அதனை தெளிவுபடுத்திய அலி சப்ரி, தான் நிதியமைச்சராகவே தற்போது உரையாற்றுவதாக தெரிவித்தார்.

மேலும் “தற்போதைய ஆபத்தான சூழ்நிலையில் விமர்சனங்களை எதிர்கொள்ள அனைவரும் அஞ்சுவதால், யாரும் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராக இல்லை. எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும், நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற, நிதி அமைச்சராக இருந்து, தேவையானதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

அரசியலில் எனது இறுதி நாட்களில் இருக்கிறேன் என்பதை நான் அறிவேன். ஆனால் செய்ய வேண்டியதை செய்வேன்.

அதிகமான டொலர் வருவாயை உறுதி செய்வதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் அறிமுகப்படுத்துவதே இன்றைய தேவை.

இதேநேரம் ஆளும் கட்சியுடன் தொடர்ந்து ஆட்சியைப் பாதுகாக்க முயற்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுபிப்பினர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன்.

2020 களின் முற்பகுதியில் தொற்றுநோய் நாட்டைத் தாக்கிய 2019 டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட வரி திருத்தங்களை இலங்கை அரசாங்கம் மறுபரிசீலனை செய்திருக்க வேண்டும்.

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு நிலை பற்றி நான் குறிப்பிட விரும்பவில்லை. அமைதியான போராட்டங்கள் தீங்கு விளைவிக்கும் போது அமைதியின்மையை உருவாக்கக்கூடாது.

உங்களால் சபையில் பெரும்பான்மையை காட்ட முடிந்தால் எதிர்க்கட்சியில் அமர்ந்து ஆட்சியை உங்களிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: