அரசியலில் ஈடுபடுகின்ற சிலர், ஜனநாயகத்திற்கு அஞ்சுகின்றனர் – அஞ்சினால் அந்தநேரம்முதல் அரசாங்கமும் நாடும் அழிந்துவிடும் என பிரதமர் தெரிவிப்பு!.

Saturday, March 12th, 2022


அரசியலில் ஈடுபடுகின்ற சிலர், ஜனநாயகத்திற்கு அஞ்சுவதாக தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனநாயகத்திற்கு அஞ்சினால் அந்தநேரம்முதல் அரசாங்கமும் நாடும் அழிந்துவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 1975 இல் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமை, 1982 இல் மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு காரணமாக இளைஞர், யுவதிகள் தேர்தல் முறை பற்றி விரக்தி அடைந்தனர்.
இதன் விளைவாக, 1988, 1989 இல், 60 ஆயிரம் இளைஞர், யுவதிகள் வீதிகளில் கொலை செய்யப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகி இருந்ததை பிரதமர் இதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.
இதனை உணர்ந்து, தாங்கள், 2005 ஆம் ஆண்டுமுதல் 2015 ஆம் ஆண்டு வரை குறித்த காலத்திற்கு முன்னரே தேர்தலை நடத்தி வாக்குரிமையை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருடாந்த வாக்காளர் தினக் கொண்டாட்டத்தின் தேசிய நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் கொழும்பில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆசியாவிலேயே முதலாவது சர்வஜன வாக்குரிமையை நடைமுறைப்படுத்தியதன் மூலம், உலகளாவிய ஜனநாயக வரலாற்றில் இலங்கை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளதென, குறித்த நிகழ்வு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தலின்போது, மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். ஆனால் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி பலருக்கும் குறைந்தளவு அறிவே காணப்படுகிறது.
வாக்காளர் தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி ‘வாக்காளர் தினமாக’ அறிவிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு முதல், வாக்காளர் தினத்தை அடிப்படையாகக் கொண்டு கருத்தரங்குகள், ஊர்வலங்கள், வாகனப் பேரணிகள், துண்டுப் பிரசுர விநியோகம், சுவரொட்டி பதாகைகள் காட்சிப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டள்ளது.
இதனிடையே இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, வாக்களித்து அரசாங்கத்தை அமைப்பவர்கள் அந்த அரசாங்கங்களை பலப்படுத்தி அபிவிருத்திக்கு பங்களிக்க வேண்டும் எனவும், தவறுகள் இருப்பின் அவற்றை விமர்சன ரீதியாக சுட்டிக்காட்டி வாக்காளர்கள், பொறுப்புள்ள பிரஜையாக மாற முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் காலங்களில், தேர்தல்கள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தும் அளவுகோல்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரச ஊடகங்கள் மட்டுமன்றி தனியார் மற்றும் சமூக ஊடகங்களும் செயற்பட வேண்டும்.
இல்லையெனில், ஊடகங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts: