அரசின் நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் – யாழ் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன்!

Thursday, January 12th, 2017

தற்போதைய அரசின் நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து எம் மக்கள் திருப்தி அடையாத நிலையில் இருக்கின்றனர். இந்த நிலை மாற்றமடைந்து அனைவர் மத்தியிலும் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

இது தொடர்பான விழிப்புணர்வுகள் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும். இதுவே, தேசிய இன ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரத்தினைப் பிரகடனப்படுத்தும் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் நேற்று யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், புதிய அரசாங்கம் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுக்கு வந்துவிட்டது.

இவ்வாறான நிலையில் இனங்களுக்கிடையிலும், மதங்களுக்குமிடையிலும் புரிந்துணர்வையும், நம்பிக்கையையும் கட்டியெழுப்புவதற்குத் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சை உருவாக்கி அந்த அமைச்சின் ஊடாகத் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடுகளை அமைச்சு செயற்படுத்தி வருகிறது.

தற்போதைய அரசாங்கம் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் என்பவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது. பல இனங்கள், மதங்கள் கொண்ட எமது நாடு ஸ்திரமாகவிருந்தால் தான் நிலையான அபிவிருத்தியை நாட்டில் முன்னெடுக்கும் போது முன்னேற்றகரமான இலக்குகளை அடைய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

unnamed-813

Related posts: