அரசிடமிருந்து மாதாந்த கொடுப்பனவை பெறுவோருக்கு 2000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படமாட்டாது – யாழ்ப்பாணத்தில் 57 ஆயிரம் குடும்பங்கள் தகுதி!

Monday, August 23rd, 2021

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நபர்களுக்காக 2000 ரூபா நிவாரண கொடுப்பனவு இன்றுடன் ஆரம்பமாகும் வாரத்தில் வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாடு முடக்கப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவைப் பெற யாழ்ப்பாணத்தில் 57 ஆயிரம் குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக. யாழ். மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

நிவாரணம் பெறத் தகுதியுடையவர்கள் குறித்த கணிப்பீடுகள் பிரதேச செயலகங்கள் ஊடாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இவை குறித்த விபரங்கள் திரட்டப்பட்ட பின்னர் கொழும்புக்கு அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்டதுள்ள மாவட்ட செயலகம் இன்று திங்கட்கிழமைமுதல் நிவாரண நிதியை கையளிக்கக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தது.

முன்பதாக கொரோனா தொற்று பரவலால் நாடு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு தலா 2000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் எவ்வித கொடுப்பனவுகளையும் பெறாத குடும்பங்கள் மாத்திரம் இந்த கொடுப்பனவை பெறுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அரச ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், சமுர்த்தி பயனாளிகள், முதியோர் கொடுப்பனவை பெறுவோர், ஊனமுற்றோர் அடங்கலாக அரசிடமிருந்து மாதாந்தம் கொடுப்பனவை பெறுவோர் 2000 ரூபா கொடுப்பனவிற்கு தெரிவு செய்யப்படமாட்டார்கள் என ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டுள்ளது.

கொடுப்பனவை வழங்குவதற்குரிய மேலதிக நிதியை திறைசேரியூடாக மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பிரதேச ஒருங்கிணைப்புக் குழு, கிராமிய குழுக்களின் ஒத்துழைப்புடன் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சேவையாற்றும் அதிகாரிகளூடாக, சுகாதார விதிமுறைகளின் கீழ், பயனாளர்களுக்கு 2000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு ஜனாதிபதி செயலணி ஆலோசனை வழங்கியுள்ளது.

கொடுப்பனவை பெற்றுக்கொண்டதாக பயனாளர்களினால் உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆவணங்களும் அவசியம் என மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு சுற்றுநிரூபத்தினூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: