அரசாங்கம் கொரோனா சவாலையும் எதிர்கொண்டு நாட்டின் பொரளாதாரத்தையும் பாதுகாத்துள்ளது – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Wednesday, July 21st, 2021

கொரோனா தொற்று உலகளாவிய தொற்றாகும். தொற்று காலப்பகுதியில் ஆட்சியை முன்னெடுப்பது இலகுவான விடயமல்ல. என்றாலும் இந்த சவால்களை நாம் எதிர்கொண்டுள்ளதுடன், பொருளாதாரத்தையும் பாதுகாத்துள்ளோம் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா நெருக்கடியால் உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பின் காரணமாகவே நாமும் எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிட்டது எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அமைச்சர் உதயகம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்தவொரு அரசாங்கமும் எரிபொருள் அல்லது அத்தியாவசிய பொருட்களின் விலைகளை விருப்பத்துடன் அதிகரிப்பதில்லை.

ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார என அனைவரும் கூறும் பிரச்சினைகள் இன்று நேற்று உருவானவை அல்ல. அவை 20, 30 வருடங்களாக நாம் எதிர்கொண்டுவரும் சவால்களாகும்.

பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குவதாக கூறும் காரணி, நாம் பிறந்த காலத்திலிருந்து பேசப்படும் விடயமாகும்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் எரிபொருள் தொடர்பில் விலை சூத்திரமொன்று கொண்டுவரப்பட்டது. இன்றுள்ள உலக விலைக்கு அந்த விலை சூத்திரத்தை பயன்படுத்தினால் எரிபொருளின் விலை பாரிய அளவில் அதிகரித்திருக்கும்.

இன்றும் நாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 50 வருடகால அரசியல் வரலாற்றில் எதிர்கொள்ளாத ஒரு பிரச்சினையாகும்.

கொரோனா தொற்று உலகளாவிய தொற்றாகும். தொற்று காலப்பகுதியில் ஆட்சியை முன்னெடுப்பது இலகுவான விடயமல்ல. என்றாலும் இந்த சவால்களை நாம் எதிர்கொண்டுள்ளதுடன், பொருளாதாரத்தையும் பாதுகாத்துள்ளோம்.

அரச நிர்வாகத்தில் நிதி முகாமைத்துவம் என்பது மிகவும் முக்கியமான காரணியாகும். நிதி வெளிப்படைத்தன்மையையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

இந்த இரண்டையும் பாதுகாத்துக்கொள்ளும் காலத்துக்கேற்ற தீர்மானமாகவே எரிபொருள் விலையில் அதிகரிப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

அமைச்சரவையும் துறைசார் அமைச்சரும் இணைந்துதான் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டோம். இது தற்காலிமான அதிகரிப்பாகும்.

பொதுஜன பெரமுனவின் கருத்தையே அதன் பொதுச் செயலாளர் கூறியிருந்தார். அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை நாம் பாதுகாப்போம். நாட்டை சுபீட்சத்துக்கு கொண்டுசெல்ல ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மக்கள் வழங்கிய ஆணையை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: