அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும – அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர வலியுறுத்து!

அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் போராட்டங்களுக்கு எந்த வகையிலும் இடமளிக்க முடியாது என எரிசக்தி மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறுகிய அரசியல் நோக்கத்துக்காக போராட்டங்களில் ஈடுபடும் தொழிற்சங்கங்கத் தலைவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதை அரசாங்க ஊழியர்கள் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதேநேரம் போராட்டங்களை மேற்கொண்டு அரச வருமானத்தை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளோம் என தம்பட்டம் அடிக்கும் தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மின்சார சபை, ஸ்ரீ லங்கன் எயார் லைன் நிறுவனம், டெலிகொம் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை மீதான இரண்டாம் நாள் விவாதம் நேற்று இடம்பெற்றது. அந்த விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் –
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து அரசியல் முறைமைகளுக்கு அமையவே அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு பிரதான எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
எனினும் அப்போது சவால்களை பொறுப்பேற்கும் துணிச்சல் எதிர்க்கட்சிகளுக்கு இருக்கவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எமக்குமிடையில் அரசியல், கொள்கை ரீதியில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவர் நாட்டுக்காக பாரதூரமான சவால்களை பொறுப்பேற்றார்.
அந்த வகையில் நாடு தற்போது பாரிய நெருக்கடியிலிருந்து மீண்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளை தடையின்றி மேற்கொள்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானங்களை சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேசம் வரவேற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|