அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Sunday, February 27th, 2022

அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நிராகரித்துள்ளார்.

எம்பிலிபிட்டிய பகுதியில் இடம்பெற்ற காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போது, பிரதமர் இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

பூகோள ரீதியில் ஏற்பட்ட பெருந்தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில், நாட்டில் கட்டுப்பாடுகளை விதித்து, போக்குவரத்து மட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை அமுல்படுத்தியதாலேயே மக்களை பாதுகாக்க முடிந்ததாக பிரதமர் கூறினார்.

எவ்வாறாயினும், வழமையான செயற்பாடுகளை உரியவாறு முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

இந்நிலையில், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: