அரசாங்கத்திடம் பணமில்லாவிடின் வீட்டிலிருந்து வேலைசெய்யும் அரச ஊழியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும் – சுட்டிக்காட்டுகிறார் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ!

Sunday, September 19th, 2021

எமது அரசாங்கம் வங்குரோத்து நிலையை அடையவில்லை. அரசிடம் பணம் இருக்கிறது. பணமில்லாவிட்டால் வீட்டில் இருந்து வேலை செய்யும் அரசாங்க ஊழியரின் சம்பளத்தை எப்படி கொடுக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கடந்த அரசாங்கத்திடம் பணம் இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் – நாங்கள் இன்னும் அரச ஊழியர்களுக்கு உரிய திகதியில் சம்பளம் வழங்கி வருகிறோம் .எங்களிடம் வீணடிக்க பணம் இல்லை. எமது வருமானம் குறைந்த மட்டத்தில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அரசாங்கம் வங்குரோத்தடையவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சௌபாக்கிய நோக்கு கொள்கை பிரகடனத்தின் படி வீதிகளின் இருபுறமும் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை முன்னெடுத்து  அதன் ஒரு நடவடிக்கையாக டபிள்யு.ஏ. சில்வா மாவத்தைமுதல் பாமன்கடை பாலம் வரையான வீதியின் இருபுறமும் மரம் நடும் நிகழ்வில் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பியிருந்த பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

மேலும் – இதன்போது ராஜாங்க அமைச்சர்  லொஹான் ரத்வத்தை  தொடர்பான  சம்பவம்  தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் – இவ்விடயம் குறித்து அரசாங்கம் விசாரணை நடத்தி வருகிறது.

சம்பவம் நடக்கும் போது  நான் அங்கு இருக்கவில்லை. எனவே அப்படி ஒரு சம்பவம் அங்கு நடந்ததா இல்லையா என்பது பற்றி  எனக்குத் தெரியாது.  விசாரணை   அறிக்கை வருவதற்கு  முன்பதாக நான்  கருத்துத் தெரிவித்தால் அது  தவறு என’றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் சிறைத்துறை அமைச்சர் என்ற வகையில் தூக்கு மேடையைப் பார்க்கச் செல்ல அவருக்கு உரிமை உள்ளது என்று நினைக்கிறேன். அதேநேரம் ஒரு அமைச்சர், இவ்வாறு இராஜினாமா செய்வது இதுவே முதல் முறை என்பதே மிகவும் சரியானது.

உலகின் பல்வேறு நாடுகளில் இவ்வாறு நடந்துள்ளது. தவறு நடந்தால் மற்ற நாடுகளில் உள்ளவர்கள் ராஜினாமா செய்வார்கள். இங்குள்ளவர்கள் இராஜினாமா செய்ய மாட்டார்கள் என்று அப்போது கூறப்பட்டது .

இப்போது அவர் இராஜினாமா செய்யும்போது சட்டத்தை இன்னும் கடுமையாகச் செயல்படுத்த வேண்டுமாம். அமைச்சர் லொஹான் ரத்வத்தை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். அவர் தவறு செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதனால், அவர் இராஜினாமா செய்தார். இது மிகவும் நல்ல விஷயம்.

இதேநேரம் அன்று மத்திய வங்கியை கொள்ளையடித்தவர்கள் இராஜினாமா செய்யவில்லை. சஜித் பிரேமதாச பல பில்லியன்களை திருடியதற்காக அவர் இராஜினாமா செய்தாரா? அவரது அமைச்சு ஊழியர்கள் அவரின் மனைவியின் சிகைஅலங்கார நிலையத்தில் வேலை செய்ததற்காகவேனும் குறைந்தபட்சம் அவர் மன்னிப்பு கேட்டாரா? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் இது போன்ற ஒன்று நடந்தது நல்ல விஷயம். இது கட்டுக்கோப்பான அரசாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே ஊரடங்கு உத்தரவை நீட்டிக்காதிருப்பது குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளருக்கு பதிலளிக்கையில் – நானொன்றும் மருத்துவர் கிடையாது. ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பில் நான் கருத்துச் சொல்வதில் பயனில்லை.

மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் நிபுணர்களின் கருத்துக்களை பெற்று ஜனாதிபதி சரியான முடிவுகளை எடுப்பார். சரியான முடிவுகளை எடுப்பதற்காகத்தான் அறுபத்தொன்பது இலட்சம் மக்கள் அவருக்கு வாக்களித்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: