அம்புலன்ஸ் இல்லை என்று மேசைகளை தாக்கிய இருவர் – சாவகச்சேரி மருத்துவமனையில் சம்பவம்!

Friday, March 23rd, 2018

விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றி வராது, தகவல் சொல்ல ஓட்டோவில் மருத்துவமனைக்கு வந்த இருவர் அம்புலன்ஸ் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு நோயாளர்களுடன் சென்று விட்டதெனக் கூறியதால் அங்கிருந்த மேசைகளைத் தாக்கிச் சேதப்படுத்திய சம்பவமொன்று சாவகச்சேரி மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது –

சாவகச்சேரி நகரப் பகுதி வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த இருவர் வீதியில் காணப்பட்டனர். அவர்களை ஏற்றிவராமல் மருத்துவமனைக்கு ஓட்டோவில் வந்தவர்கள் அம்புலன்ஸை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டனர்.

அம்புலன்ஸ் நோயாளர்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு சென்றுவிட்டதென அங்கு கடமையாற்றியவர்கள் தெரிவித்தனர்.

இதனால் கோபமடைந்த அவர்கள் அங்கு வெளிநோயாளர் பிரிவில் காணப்பட்ட மேசையைத் தாக்கிச் சேதப்படுத்தி விட்டுச் சென்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

சாலையோர வளைவுக் குறியீட்டுக் கம்பத்துடன் மோதி தலையில் காயமடைந்த நிலையில் காணப்பட்ட குறித்த இருவரையும் வேறொரு ஓட்டோவினர் ஏற்றிவந்து மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையின் பின்னர் அம்புலன்ஸ் வாகனம் வந்தவுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related posts: