அமைச்சர் விடயம் தொடர்பில் ஆராய்பவர்கள் மக்கள் பிரச்சினை தொடர்பில் ஏன் ஆராயவில்லை – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணச சபை உறுப்பினர் தவநாதன் கேள்வி

அமைச்சர் விடயம் தொடர்பில் ஆழமாக சட்ட நுணுக்கங்களை ஆராய்பவர்கள் பொதுமக்களின் பிரச்சினை தொடர்பில் ஏன் இவ்வாறு ஆராயவில்லை என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் 129 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் வடக்கு அமைச்சர் நியமனம் தொடர்பாக வாக்குவாதம் இடம்பெற்றது.
அதில் மேலும் அவர் தெரிவிக்கையில் –
வடக்கு மாகாண அமைச்சர் நியமன விடயம் முடிவில்லாத விடயமாகப் போகிறது. இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அல்லது தமிழரசுக் கட்சியின் தலைவர் தான் பொறுப்புக்கூற வேண்டும்.
ஆளும்கட்சியினரே தாம் தெரிவு செய்த முதலமைச்சரை பற்றி குறை கூறுகிறார்கள். நீதிமன்ற விடயங்களை நீதிமன்றில் விட்டுவிட்டு மக்களுக்கான விடயங்களை நாம் பார்க்க வேண்டும். ஆளும் கட்சி அமைச்சர் சபைக்குள் ஊழல் குற்றச்சாட்டு என குழு நியமித்தபோதே இந்த அவை தார்மீக தகுதியை இழந்து விட்டது. தொடர்ந்து இது தொடர்பாக வாதாடாமல் நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை இந்த சபையை ஒத்தி வையுங்கள். இது மக்களின் பணம் அதையாவது மீதப்படுத்துங்கள்.
வரலாற்றில் இது ஒரு பதிவாக இருக்கும். எமது போராட்டத்துக்கும் இழப்புகளை சந்தித்த மக்களுக்கும் கிடைத்த சொற்ப வரப்பிரசாதத்தையும் நாமே போட்டுடைத்தோம் என்ற வரலாற்றுத் தவறை நாம் செய்யப்போகிறோம்.
எமக்கு வெளியில் இருந்து எதிரிகள் வரவில்லை எங்களுக்குள்ளேயே பிரச்சினைகளை உருவாக்க பலர் உள்ளார்கள்.
சட்டம் படித்தவர்களும் சட்டம் அறிந்தவர்களும் தொடர்ச்சியாக அமைச்சர் பிரச்சினையை பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சட்டநுணுக்கங்களை ஆராய்கிறார்கள்.
மக்களின் நலன்களுக்கு இவ்வளவு நுட்பமாக ஏன் பேசவில்லை. மக்களின் பிரச்சினைக்காக எந்த சட்டத்தை எடுத்து நுணுக்கமாக இதுவரை இந்த அவையில் ஆராய்ந்தோம்? எனவே இந்த அவையை தீர்வு வரும் வரை ஒத்திவையுங்கள் என தெரிவித்தார்.
Related posts:
|
|