அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனாதிபதியிடம் முறையீடு!

Thursday, May 4th, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு எதிராக தொழில் அமைச்சர் ஜோன் செனவனவிரட்ன அமைச்சரவைக் கூட்டத்தில் முறைப்பாடு ஒன்றினை முன்வைத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் அமைச்சர் ராஜித சேனாரட்ன தம்மை நேரடியாக விமர்சனம் செய்ததாக, ஜோன் செனவிரட்ன ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.

“ஜனாதிபதி அவர்களே, அமைச்சர் ராஜித அமைச்சரவையின் இணைப் பேச்சாளராவார். அவரால் முன்வைக்கப்படும் கருத்துக்களை அவர் பொறுப்புடன் கூறவேண்டும். மே தினக் கூட்டத்தில் நான் மஹிந்தவின் செருப்பை நக்குவதாக நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளார். அவ்வாறாயின் ஜனாதிபதி அவர்களே நாம் எல்லோரும் செருப்பு நக்குபவர்களே ஏனெனில் ராஜிதவும் மஹிந்தவின் அமைச்சரவையில் அங்கம் வகித்திருந்தார். இவ்வாறு கருத்து வெளியிட அனுமதிக்க வேண்டாம்” என ஜோன் செனவிரட்ன கோரியுள்ளார்.

மேற்குறித்த இந்நடவடிக்கை குறித்து வருந்துவதாவும் இது பிழையான காரியம் எனவும்  தெரிவித்த ஜனாதிபதி  “ஆம். அது என்றால் உண்மைதான். இவ்வாறான விடயங்கள் நடக்கக் கூடாது. ஒரே அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சகோதர அமைச்சர்களை விமர்சனம் செய்வது நல்லதல்ல. எனவே எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் ராஜித சேனாரட்ன பங்கேற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது