அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ் விஜயம் – கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் கண்காணிப்பு!

Sunday, May 30th, 2021

இன்றுமுதல் யாழ்ப்பாணம், கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பமாவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று யாழ்ப்பாணத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு வருகைதரவுள்ளார்.

சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, தலா 50 ஆயிரம் தடுப்பூசிகள் வீதம் சினோபாம் தடுப்பூசிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில், கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டு 11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை சேர்ந்த 61 கிராம சேவையாளர் பிரிவுகளில் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

இதன்படி, தெரிவு செய்யப்பட்ட இடங்களில், இன்று காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.

குறித்த கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் தவிர்ந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முதலாம் மாத்திரை தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவருக்கு, இரண்டாம் மாத்திரை தடுப்பூசி வழங்கப்படும் நேரம் மற்றும் இடம் என்பனவற்றை குறுந்தகவல் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதேநேரம், கைப்பேசிகள் இல்லாதவர்களுக்கு மாற்று வழியில் இதுகுறித்து அறிவிப்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: