அமைச்சர் டக்ளஸின் தற்றுணிவால் கடலட்டைப் பண்ணையாளர்கள் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டு வருகின்றனர் – நக்டாவின் உதவிப் பணிப்பாளர் நிருபராஜ் சுட்டிக்காட்டு!

Monday, July 19th, 2021

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நெறிப்படுத்தில் சுமார் 300 க்கும் அதிகமான அட்டைப் பண்ணைகள் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகத் சுட்டிக்காட்டியுள்ள தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை உதவிப் பணிப்பாளர் நிருபராஜ், கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் தற்போது 250 க்கும் அதிகமான கடலட்டைப் பண்ணைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர்,  2019ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 50 கடலட்டைப் பண்ணைகளுக்கே அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும், டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் அது 300 ஐக் கடந்து உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றுள் பெரும்பாலானவைக்கு முழு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்த அவர், தழுவல் அனுமதி வழங்கப்பட்டுள்ள ஏனையவற்றுக்கும் முழு அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

கடலட்டைப் பண்ணைகளுக்கு அனுமதி பெறுவதற்கு நீண்டகாலம் பிடிக்கும் என்று தெரிவித்த அவர், இதனால், கடலட்டைப் பண்ணை முயற்சியாளர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தழுவல் அனுமதிகளை வழங்கி, துரிதமாக கடலட்டைப் பண்ணைச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வழிசெய்திருப்பதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..

‘குறிப்பாக கொவிட் நெருக்கடி காலத்தில் கடற்றொழில் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடலட்டைப் பண்ணைகளே பல கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பற்றியது.

‘கௌதாரிமுனையில் சீன முயற்சியாளர்களால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் கடலட்டைப் பண்ணைச் செயற்பாடுகள் தொடர்பான சர்ச்சைகள் தோற்றுவிக்கப்பட்டிருப்பதால், தழுவல் அனுமதியுடன் கடலட்டைப் பண்ணைச் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கும் நூற்றுக்கணக்கான வடக்கு கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை தோன்றியிருக்கிறது. ‘எனினும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தற்றுணிவான செயற்பாடுகள் காரணமாக, கடலட்டைப் பண்ணையாளர்கள் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டு வருகின்றனர்’ எனவும்  நிருபராஜ் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: