அமைச்சருடன் தடுமாறிய விமானி : மயிரிழையில் தப்பினார் மகிந்த அமரவீர!

Tuesday, January 16th, 2018

தைப்பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கு விமானியால் பயங்கர அனுபவம் ஏற்பட்டுள்ளது. அமரவீர வருகை தந்த வானூர்தி பலாலி நோக்கிப் பயணிக்காமல் திசைமாறிச் சென்று, எரிபொருள் தீரும் நிலையிலேயே பலாலியைச் சென்றடைந்ததாக, சிவில் வானூர்தி சேவை அதிகார சபையின் பணிப்பாளர் சி.நிமல்சிறி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

அமைச்சர் மகிந்த அமரவீர பலாலியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வுக்காகச் சென்றிருந்தார். அவர் பயணித்த வானூர்தி திசைமாறி சென்று தலைமன்னாரில் தரையிறக்கப்பட்டது. பாதை மாறியுள்ளதை அறிந்து கொண்ட அமைச்சரின் தலைமை பாதுகாப்பு அதிகாரி, அலைபேசியின் வரைபட உதவியுடன் பலாலி வானூர்தித் தளத்தை நோக்கிப் பயணித்துள்ளனர்.

வானூர்தி பலாலியில் தரையிறக்க முற்பட்ட வேளையில் எரிபொருளும் தீர்ந்து விட்டது. அதனால் இலங்கை வான்படையின் உதவியுடனேயே வானூர்தி தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து வானூர்தியில் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்ல ஒரு மணித்தியாலமே தேவைப்படும் நிலையில் இந்தச் சம்பவத்தால் அமைச்சர் இரண்டு மணித்தியாலங்கள் பயணிக்க நேர்ந்துள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய விமானியின் வானூர்தி செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் இல்லாமல் செய்யப்பட்டு இந்தச் சம்பவம் குறித்து விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related posts: