அமைச்சரவையில் இன்று முன்வைக்கப்படுகின்றது 20ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூல வரைவு!

Wednesday, September 2nd, 2020

அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச்சட்டமூல வரைவு இன்றையதினம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச் சட்டமூலத்தின் வரைவு, சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின் மீளாய்விற்காக, சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து, புதிய அரசியலமைப்பை கொண்டுவருதல் தொடர்பான கருத்தியல், கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் முக்கியமான பேசுபொருளாக அமைந்திருந்தது.

இதற்கமைய, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர், அது தொடர்பில் பாரிய கருத்தாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், அரசியலமைப்பின் 19ஆம் திருத்தச் சட்டத்தை நீக்கி, 20 ஆம் திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்தது.

அத்துடன், அரசியலமைப்பு மறுசீரமைப்புக்காக ஐவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டதுடன், அமைச்சர்களான பேராசியர் ஜீ.எல்.பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, அலி சப்ரி, தினேஸ் குணவர்தன, உதய கம்மன்பில ஆகியோர் அதன் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டனர்.

9 ஆவது நாடாளுமன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை நிகழ்த்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டில் ஸ்திரமான நாடாளுமன்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்கு அமைவாக புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் போது தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச் சட்டமூலத்தின் வரைவு சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவின், மீளாய்விற்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தில், 19 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதியின் பதவிக்காலம், 5 ஆண்டுகளாக அவ்வாறே இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஜனாதிபதி பதவி வகிக்கும் சந்தர்ப்பம் இரண்டு தவணைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடும் அவ்வாறே இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், 19 ஆவது திருத்தச் சட்டத்தை திருத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சர்களுக்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவனஸ குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கவும், அதில் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பிர் தொடர்ந்தும் ஆராய வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த திருத்தம் அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் கலந்துரையாடப்பட்டு இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும்அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: