அமெரிக்கா பயணமானார் ஜனாதிபதி!

Monday, September 18th, 2017

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது அமர்வில் நாளை செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தின் பொதுச் சபையின் 72 ஆவது அமர்வு நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

மக்களை மையமாகக் கொண்ட நிலையான உலகில் அனைவருக்கும் முக்கியமான வாழ்க்கை மற்றும் சமாதானத்திற்கு முயற்சித்தல் என்பது  இம்முறை தொனிப்பொருளாகும்.

ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னர் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் ஜனாதிபதி உரையாற்றும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

ஸ்ரீலங்காவின் அரசியல் இணக்கப்பாடு குறித்தும் நல்லிணக்கம் மற்றும் சமாதானம் குறித்தும் 2017ஆம் ஆண்டை வறுமை ஒழிப்பு வருடமாகப் பிரகடனப்படுத்தி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டம் குறித்தும் பசுமை அபிவிருத்திக்கான திட்டங்கள் பற்றியும் ஜனாதிபதி அங்கு தெளிவுபடுத்தவுள்ளார்.

அத்துடன் இந்த அமர்வில் பங்கேற்கும் பல உலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை வரை அமெரிக்காவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி, அந்நாட்டில் உள்ள ஸ்ரீலங்கா நாட்டவர்களைச் சந்திப்பதற்கும் பல நிகழ்வுகளில் பங்கேற்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: