அமெரிக்கத் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு!

Friday, July 27th, 2018

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே நடத்தப்பட்ட குண்டுவெடிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில், அந்த வெடிபொருளை வெடிக்கச் செய்தவருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: பெய்ஜிங்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே வியாழக்கிழமை பலத்த வெடி சப்தம் கேட்டது. அதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்த பாதுகாப்புப் படை வீரர்கள், அந்த வெடிபொருளை வெடிக்கச் செய்த நபரை கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபரில் பெயர் ஜியாங் எனவும், அவர் இன்னர் மங்கோலியாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. எனினும், இந்த குண்டுவெடிப்பின் நோக்கம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தில், ஜியாங்குக்கு கைகளில் காயம் ஏற்பட்டது. எனினும், அந்தக் காயங்கள் அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக இல்லை. ஜியாங்கைத் தவிர இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு சில மணி நேரங்களிலேயே, அமெரிக்கத் தூதரகத்தின் விசா வழங்கும் பணிகள் வழங்கம் போல நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் சமூகத்தின் மீது வெறுப்பு கொண்ட தனி நபர்கள், அவ்வப்போது பொது இடங்களில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி தங்களுக்கும், பிறருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில், மழலையர் பள்ளியொன்றில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

இந்தத் தாக்குதலுக்கு, மன நலம் பாதிக்கப்பட்ட 22 வயது இளைஞரே காரணம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

Related posts: