அபாயகரமான வெடிபொருட்கள் இருக்கும் என நம்பப்படுவதால் துப்பரவு பணிகளை மேற்கொள்வதில்  இடர்பாடுகளை சந்தித்து வருவதாக வலிகாமம் வடக்கு மக்கள் கவலை!

Wednesday, April 18th, 2018

வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட தமது காணிகளில் அபாயகரமான வெடிபொருட்கள் இருக்கும் என நம்பப்படுவதால் தாம் துப்பரவு பணிகளை மேற்கொள்வதில் மிகுந்த இடர்பாடுகளை சந்தித்து வருவதாக துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வரும் மக்கள் எமக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டில் ஏற்ப்பட்ட யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஆடி மாதம் தமது பகுதிகளை விட்டு உடுத்த உடைகளுடன் ஏதிலிகளாக இடம்பெயர்ந்திருந்தோம். இவ்வாறு இடம்பெயர்ந்த நாம் கடந்த 28 வருடங்களாக எமது உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் நலன்புரி நிலையங்களிலும் பல்வேறுபட்ட இடர்பாடுகளுடன் வாழ்ந்து வந்தோம்.

இருந்த போதிலும் எமது காணிகள் விடுவிக்கப்பட்டு நாம் மீள குடியேறிய போதிலும் எமது சொந்த இடங்களிற்கு நாம் திரும்பி வந்த போது எமது குடியிருப்புகள் எச்சங்களாகவே இருப்பதை கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம்.

எமது காணிகளில்; பெருமரங்களும் பற்றைகளும் பரந்து காடாக காட்சியளிக்கும் அதேவேளை காணிகளின் எல்லைகளை கூட சரியான முறையில் இனம்கண்டுகொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 13 ஆம் திகதி எமது காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளமையானது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தாலும் நாம் எமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு இன்னும் பல மாதங்களோ ஆண்டுகளோ செல்லும் என எண்ணத்தோன்றுகிறது.

ஏனென்றால் விடுவிக்கப்பட்ட எமது காணிகளில் படைத்தரப்பினர் பயன்படுத்திய வெடிபொருட்கள் ஆங்காங்கு சிதறிக்கிடக்கின்றமையால் காணிகளின் பற்றைகளை வெட்டி அவற்றை எரிக்கின்ற போது அதனால் ஏற்படும் உயிர் ஆபத்துக்களையும் மற்றும் பாதிப்புக்களையும் எண்ணும் போது ஒருவித பயமும் அச்சமும் எம்மை தொற்றிக்கொள்கிறது.

முன்னய காலங்களில் படைத்தரப்பினரால் விடுவிக்கப்பட்ட காணிகளில் மீளக்குடியமரும் பொருட்டு தமது காணிகளை துப்பரவு செய்யும் போதும் குப்பைகளை எரியூட்டிய போதும் வெடிபொருட்கள் வெடித்ததில் உயிரிழப்புகளும் அவயவங்களை இழந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அந்த மக்கள் இதேபோன்ற சம்பவங்கள் எமக்கும் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதாகவும் இந்த விடயத்தில் துறைசார்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts: