அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் – பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவிப்பு!

Tuesday, April 21st, 2020

கடந்த ஆண்டு நடைபெற்ற ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் போது உயிரிழந்தவர்களுக்காக இன்று காலை 8.45 அளவில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து 8.47 அளவில் வீடுகளில் விளக்குகள் ஏற்றப்பட்டு பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன் இன்று காலை 8.40 அளவில் சகல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் மணி ஓசை எழுப்பப்பட்டது.

இதேவேளை இந்து ஆலயங்களில் மாலை 5 மணியளவில் ஆலய மணிகளை ஒலிக்கச் செய்து விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த விசேட வழிபாட்டின்போது கொரோனா வைரஸ் பரவலை ஒழிப்பதற்கு அரசாங்கம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களையும் உரிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறும் புத்தசாசனம் கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு வேண்டுகோள் விடுத்திருந்தமைக்கு ஏற்ப இடம்பெற்றன.

குறித்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர். அஞ்சலி செலுத்திய உறவினர்கள் சமூக இடைவெளியினை பேணியிருந்தமை குறறிப்பிடத்தக்கது.

அதேநேரம், வட மாகாணத்திலும், மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வணக்கஸ்தலங்களிலும் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், மட்டகளப்பு சியோன் தேவாலயலம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம் உள்ளிட்ட மதஸ்தலங்களிலும், சங்ரிலா உள்ளிட்ட விருந்தகங்களிலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. இதன்போது 259 பேர் உயிரிழந்தனர்.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்பட்டு ஒருவரும் பூர்த்தியாகியுள்ள நிலையில் அதனுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பின்னணியில் செயற்பட்டவர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை என கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை நிகழாதிருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சகரும் இனங்காணப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

Related posts: