அனைத்து ஆசிரியர் கலாசாலைகளையும் ஒன்றிணைத்து தேசிய ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக் கழகம் உருவாக்க நடவடிக்கை – ஜனாதிபதி அறிவிப்பு!

Monday, June 28th, 2021

இலங்கையில் உள்ள அனைத்து ஆசிரியர் கலாசாலைகளையும் ஒன்றிணைத்து, தேசிய ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அதேபோன்று அரச தாதியர் கல்விக் கல்லூரிகளையும் இணைத்து, தேசிய தாதியர் பல்கலைக்கழகம் ஒன்றையும் ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் விவசாயத் துறையுடன் சம்பந்தப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள அனைத்து ஆராய்ச்சி நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, பெருந்தோட்ட, விவசாயம் தொடர்பான தேசிய பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டியெழுப்புவதற்காக, அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக, உயர்கல்வி நிறுவனங்கள் இல்லாத 10 மாவட்டங்களைத் தெரிவு செய்து, அவற்றின் நகரப் பிரதேசங்களில், நகரப் பல்கலைக்கழகங்களை கட்டியெழுப்புவதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று நாட்டில் தொழில்நுட்பக் கல்வியை முன்னேற்றுவதற்கு, பாரிய நிகழ்ச்சித் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் நிலைமைகளின் கீழ், முழு பல்கலைக்கழக நடவடிக்கைகளையும் ஒன்லைன் முறைமையின் ஊடாக முன்னெடுத்துச் செல்ல, நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அத்துடன் விஞ்ஞான, தொழில்நுட்ப, பொறியியல் கணிதம் பாடத்துறைகளுக்கான மாணவர்களை அதிகரிப்பதற்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் புதிதாகப் பீடங்களை நிர்மாணிக்கவும் நாம் நிதி ஒதுக்கி, அதற்கான நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: