அனுமதி இல்லாத சுற்றுலா விடுதிகள் கைப்பற்றப்படும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

Thursday, April 20th, 2017

யாழ்ப்பாணத்தில் உள்ள அனுமதியில்லாத சுற்றுலா விடுதிகளை கையகப்படுத்தி மாநகர சபையிடம் ஒப்படைக்க வேண்டும் என யாழ்ப்பாண பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறைச்சாலைக்கு முன்னால் உள்ள கட்டடம் மற்றும் ஜே.65 ஜே.30 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள சுற்றுலா விடுதிகளையே இவ்வாறு கையகப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் யாழ்ப்பாண சிறைச்சாலையில் கழிவுநீர் அகற்றுவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

இந்த கட்டடத்துக்கு நகர அபிவிருத்தி திணைக்களத்தின் அனுமதியும் பெறப்படவில்லை. சிறைச்சாலைக் கட்டடம் அமைந்துள்ள காணியைச் சிறைச்சாலை திணைக்களத்திற்கு வழங்கப் பிரதேச காணிப் பயன்பாட்டுக் குழு மறுத்துள்ளது கழிவு நீர் தொடர்பிலும் டெங்கு தொற்று தொடர்பிலும் பொதுமக்கள் மீது எவ்வாறான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றதோ அதேபோன்று யாழ்ப்பாணச் சிறைச்சாலை கட்டடத்துக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.