அனலைதீவு – புளியம்தீவு இணைப்பு வீதியை நவீன முறையில் சீரமைக்க 83 மில்லியன் ஒதுக்கீடு – ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன்!

Monday, July 30th, 2018

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் ஊர்காவற்றுறை அனலைதீவு – புளியம்தீவு பிரதேச மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அனலைதீவு – புளியம்தீவு இணைப்பு வீதி நவீன முறையில் சீரமைக்கப்படுவதற்காக 83 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு புனரமைப்பு நடவடிக்கைகளுக்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக ஊர்காவற்றுறை பிரதேச தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான மருதயினார் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க அமைச்சின் விசேட நிதி ஒதுக்கீடு ஊடாக குறித்த நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில்  அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

ஊர்காவற்றுறை பிரதேசத்திற்குட்பட்ட அனலைதீவு – புளியம்தீவு பிரதேசங்களை இணைக்கும் குறித்த வீதியானது நீண்டகாலமாக செப்பனிடப்படாது காணப்பட்டது. இதனால் இப்பிரதேசங்களின் மக்கள் நீண்டகாலமாக தமது போக்குவரத்துகளின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் குறித்த வீதியின் அபிவிருத்தியின் அவசியம் குறித்தும்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்து வந்திருந்தனர்.

மக்களது தேவைகளை உணர்ந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலும் மத்திய அரசுடன் கொண்டுள்ள நல்லுறவு காரணமாக குறித்த வீதியை புனரமைப்பு செய்வதற்கான முயற்சிகளை நல்லிணக்க அமைச்சின் ஊடாக மேற்கொண்டதன் பயனாக அந்த அமைச்சின் விசேட நிதியினூடாக 8 கோடி 30 இலட்சம் ரூபா நிதி குறித்த வீதியின் புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Related posts: