அந்நியச் செலாவணியை விரைவாக ஈட்ட கைத்தொழில் துறைக்கு புதிய உத்திகள் வகுக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்து!

Friday, June 17th, 2022

அந்நியச் செலாவணியை விரைவாக ஈட்டுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கைத்தொழில்துறையில் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

கைத்தொழில் அமைச்சின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்காக நேற்று கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

முதலீட்டை ஊக்குவிப்பதற்காக புதிய உத்திகளைக் கையாண்டு கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கு பாரியளவு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

அந்நியச் செலாவணியை ஈட்டக்கூடிய கைத்தொழில்களை இனங்கண்டு அவற்றின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அந்நியச் செலாவணி நெருக்கடியினால் கைத்தொழில் துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

ஏற்றுமதி கைத்தொழில் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணியை நேரடியாக மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் உள்நாட்டுக் கைத்தொழில்களுக்காக புதிய கொள்கை ஒன்று வகுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அதன் பிரதான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், மிக விரைவில் அதனை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இரத்தினக்கல் கைத்தொழில் துறையின் மூலம் பெறக்கூடிய அந்நியச் செலாவணியின் அளவு மிக அதிகமாக இருந்தாலும், தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் காரணமாக இலங்கைக்கு இரத்தினக்கற்களுக்கு உரிய இலாபம் கிடைப்பதில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

புதிய கைத்தொழில்களை உருவாக்கும்போதும் ஏற்கனவே உள்ள கைத்தொழில்களை தொடர்ந்து நடத்திச் செல்லும்போதும் பல்வேறு அரச நிறுவனங்களின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அவற்றை பலமிழக்கச் செய்வதாக கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.

இதனால் பல வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாடு இழந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நீண்டகாலமாக இருக்கின்ற விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் முதலீட்டிற்கு கடுமையான தடையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கைத்தொழிற்துறைக்கு அனுமதி வழங்கும் அனைத்து நிறுவனங்களும் ஒரே மேசையில் ஒன்றிணைந்து தற்போதுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால் முதலீட்டாளர்களை வெற்றிகொள்ள முடியாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டின் பொருளாதாரம் வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. அதனை உற்பத்திப் பொருளாதாரமாக மாற்றுவது காலத்தின் தேவை எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: